கோலிவுட்டில் வித்தியாசமான ஸ்கிரிப்ட், விறுவிறுப்பான கதைகளத்தை தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர்களில் ஒருவர் விஷ்ணு விஷால். இவர் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் FIR. லாக்டவுனுக்கு பிறகு துவங்கிய இந்த படப்பிடிப்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் படக்குழுவினர் செயல்பட்டு வருகின்றனர். இரவு நேர ஷூட்டிங் முழுமூச்சில் நடைபெற்று வருகிறது. 

இந்த படத்தை தொடர்ந்து பிரபு சாலமன் இயக்கத்தில் உருவான காடன் திரைப்படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. ராணா முதன்மை கேரக்டரில் நடித்துள்ள இந்த படத்தில் யானை பாகனாக நடித்துள்ளார் விஷ்ணு. தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் உருவாகி வருகிறது. 2021-ம் ஆண்டு பொங்கல் நாளன்று வெளியாகும் என்ற அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. 

இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அத்துடன் ஒரு ஸ்க்ரீன்ஷாட்டையும் இணைத்திருந்தார். அதில் மதன் என்ற பெயரில் மர்ம நபர் ஒருவர் சிலருக்கு குறுந்தகவலை அனுப்பியுள்ளார். அந்த குறுந்தகவலில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்த குறுந்தகவல் ஒரு தமிழ் திரைப்படத்துக்காக அனுப்பப்படுகிறது. இப்படத்துக்கு பின்னால் திறமையாளர்களின் குழு ஒன்று உள்ளது. புதிய தயாரிப்பாளர் ஒருவர் இப்படத்தை தயாரிக்கவுள்ளார். இந்த செய்தி அவரிடமிருந்தே அனுப்பப்படுகிறது. அவர் உங்களை இப்படத்தில் இணைத்துக் கொள்ள விரும்புகிறார். பெரும் ஊதியம் கிடைக்கும். நீங்கள் விருப்பப்பட்டால் மேற்கொண்டு தகவல்களை நான் உங்களுக்கு அளிக்கிறேன். இப்படத்தில் விஷ்ணு விஷால் நாயகனாக நடிக்கிறார் என்று அந்த மர்ம நபர் அனுப்பிய குறுந்தகவலில் கூறப்பட்டுள்ளது.

இதை பகிர்ந்துள்ள விஷ்ணு விஷால், தனது பெயரை தவறான காரியங்களுக்காக பயன்படுத்த முயற்சிப்போரிடமிருந்து எச்சரிக்கையாக இருக்கும்படி தனது ரசிகர்களுக்கும், இணையவாசிகளுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் இது போன்ற செய்திகளை பரப்பி தவறான காரியங்களில் ஈடுபடுவோர் மீது தனது கண்டனங்களையும் தெரிவித்துள்ளார்.

தற்போது தன்னுடைய தயாரிப்பு நிறுவனம் தவிர்த்து வேறு எந்த நிறுவனத்தின் தயாரிப்பிலும் தான் நடிக்கவில்லை என்றும் விரைவில் இது குறித்து காவல்துறையில் புகாரளிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார் விஷ்ணு. சமூக வலைத்தளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் நடிகர்களில் ஒருவர் விஷ்ணு. அவரிடமே இப்படி கைவரிசை காண்பித்தால் நியாயமா ? என்று குரல் எழுப்பி வருகின்றனர் அவரது ரசிகர்கள். 

சமூக வலைத்தளங்களில் பிரபலங்களின் பெயரில் மோசடி நடிப்பது புதிதல்ல. இயக்குனர்கள் விஷ்ணு வர்தன், பி.எஸ்.மித்ரன் போன்றோர் இந்த பிரச்சனையை எதிர் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.