கோலிவுட்டில் இருந்து ராஞ்சனா படம் மூலம் பாலிவுட் சென்ற தனுஷ், தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் தி ஃபகிர் படம் மூலம் ஹாலிவுட் சென்றார். இந்நிலையில் அவெஞ்சர்ஸ்: என்ட் கேம் படத்தை இயக்கிய ஜோ ரூஸோ, ஆண்டனி ரூஸோ தி கிரே மேன் என்கிற படத்தை இயக்குகிறார்கள். கேப்டன் அமெரிக்கா புகழ் கிறிஸ் இவான்ஸ், ரயன் கோஸ்லிங் நடிக்கும் தி கிரே மேன் படத்தில் தனுஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

தனக்கு இந்த மிகப் பெரிய வாய்ப்பு கிடைத்தது குறித்து ட்விட்டர் மூலம் மகிழ்ச்சி தெரிவித்தார் தனுஷ். தனுஷுக்கு கிடைத்த ஹாலிவுட் பட வாய்ப்பை பார்த்து அவரின் அண்ணன் செல்வராகவன், திரை வட்டார நண்பர்கள் ஆகியோர் பெருமையாக ட்வீட் செய்திருந்தனர். ரஜினியின் மருமகன் தனுஷ் என்கிற அடையாளத்தை தாண்டி தனக்கென்று உலக அளவில் ஒரு அடையாளத்தை உருவாக்கியுள்ளார் என்று அவரின் ரசிகர்கள் பெருமையாக கூறி வருகிறார்கள்.

இந்நிலையில் தனுஷின் ஆஸ்தான இசையமைப்பாளர்களில் ஒருவரான ஷான் ரோல்டன் ட்விட்டரில் பதிவு ஒன்றை செய்துள்ளார். தமிழ் சினிமாவின் டிகேப்ரியோ தனுஷ் தான் என்று நான் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கூறினேன். கலாய்ச்சீங்களேடா சொம்பைகளா என்று பதிவிட்டுள்ளார். 

ஷான் ரோல்டனின் ட்வீட்டை பார்த்த தனுஷ் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். ஒரு சில சமூக வலைதளவாசிகளோ ஷான் ரோல்டனை கிண்டல் செய்கிறார்கள். இதை எப்படி ஷான் கையாளுவார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 

தனுஷ் இயக்கிய பவர் பாண்டி படத்திற்கும், தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி இரண்டாம் பாகத்திற்கும் ஷான் தான் இசையமைத்திருந்தார். தனுஷ் அடுத்து இயக்கவிருக்கும் திரைப்படம் நான் ருத்ரன். வரலாறு சிறப்புமிக்க இந்த படம் சில காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கும் ஷான் ரோல்டன் தான் இசையமைக்கிறார்.