திரையுலகின் சிறந்த இசையமைப்பாளராகவும், சீரான நடிகராகவும் திகழ்பவர் விஜய் ஆண்டனி. கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்ட லாக்டவுனில் தயாரிப்பாளர்களின் நலன் கருதி தனது சம்பளத்தை குறைத்த முதல் நடிகர் என்ற பெருமையையும் விஜய் ஆண்டனி பெற்றார். கடந்த மாதம் விஜய் ஆண்டனி நடிக்கும் கோடியில் ஒருவன் படத்தின் அறிவிப்பு வெளியாகி சக்கை போடு போட்டது. செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் - T.D ராஜா தயாரிக்கும் இந்த படத்தை இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கி வருகிறார். 

ஆத்மீகா நாயகியாக நடிக்கிறார். இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் வழங்க தனஞ்செயன் இப்படத்தை வெளியிடுகிறார். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைக்கும் இந்த படத்திற்கு உதய குமார் ஒளிப்பதிவு செய்கிறார். லியோ ஜான் பால் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். 2021-ம் ஆண்டு சம்மருக்கு இந்த படம் வெளியாகவுள்ளது. 

முன்னதாக விஜய் ஆண்டனியின் பிறந்தநாளில் பிச்சைக்காரன் 2 படத்தின் அறிவிப்பு வெளியானது. கடந்த 2016ம் ஆண்டு வெளியாகி ஹிட்டான பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கிறார்கள். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகவிருக்கும் பிச்சைக்காரன் 2 படத்தை தேசிய விருது பெற்ற ப்ரியா கிருஷ்ணசாமி இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் தமிழ் திரையின் ஹிட் பாடல்களில் ஒன்றான நம்ம ஊரு சிங்காரி பாடலை ரீமிக்ஸ் செய்து வெளியிட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் அந்த பாடலில் அவரே தோன்றி நடித்துள்ளார். இந்த பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

1979-ம் ஆண்டு வெளியான நினைத்தாலே இனிக்கும் படத்தில் இடம் பெற்றுள்ள இப்பாடல் இன்று வரை ரசிகர்களின் ஃபேவரைட்டாக இருந்து வருகிறது. கார்வான் பாடல் தளத்தில் வெளியான இந்த பாடலின் ரீமிக்ஸ் இக்காலத்து இசை பிரியர்களையும் கவர்ந்துள்ளது என்பது கூடுதல் தகவல். இந்த பாடலை சரிகமா மற்றும் அமேசான் ப்ரைம் மியூசிக் இணைந்து வழங்குகின்றனர். பாடல் காட்சிகளில் ராக்ஸ்டார் போல் தோற்றமளிக்கிறார் விஜய் ஆண்டனி. இதை பார்த்த ரசிகர்கள் தங்களது ஆதர்ஷ நாயகர்களின் பெயரை குறிப்பிட்டு, அவர்களுக்கு இசையமையுங்கள் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.