கொரோனா வைரஸ் பாதிப்பு கொஞ்சமாக குறைந்த வருவதால், பொதுமுடக்க தளர்வுகளை அதிகரித்து வருகிறது மத்திய அரசு. இதையொட்டி ஒரு விமானத்தில் 80 சதவீத பயணிகளை ஏற்றிச் செல்லவும் அனுமதி அளித்துள்ளது. இதனால் விமான போக்குவரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. உள்நாட்டு விமானப் பயணம் மேற்கொள்ளும் மூத்த குடிமக்களுக்கு விமானக் கட்டணத்தில் 50 சதவீத கட்டணச் சலுகை வழங்கப்படும் என ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.  


மூத்த குடிமக்களுக்கு மட்டுமே இந்த சலுகை பொருந்தும் என்றும் ஏர் இந்தியா நிறுவனம் கூறியுள்ளது. இதற்கு 60 வயது நிறைவடைந்து இருக்க வேண்டும். அதற்கான சான்றிதழ் அவசியம் வைத்திருக்க வேண்டும் மற்றும் மூத்த குடிமக்கள் எக்கனாமிக் வகுப்பில் மட்டுமே பயணிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 


ஆனால் 50 சதவீத டிக்கெட் குறைப்பு என்பது விமானக் கட்டணத்தின் அடிப்படை கட்டணத்தில் இருந்து மட்டுமே சலுகை வழங்கப்படும். வரி உள்ளிட்ட இதர கட்டணங்கள் கூடுதலாக வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் பன்னாட்டு சேவைகளுக்கு இந்த சலுகையை கோர முடியாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.