தேசிய டேபிள் டென்னிஸ் தொடரில் பங்கேற்க சென்ற தமிழக இளம் வீரர் கார் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

83-வது தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் மேகாலயாவில் இன்று தொடங்குகிறது. இதில் தமிழ்நாடு சார்பில் இளம் வீரரான தீனதயாளன் விஷ்வா உள்பட 4 வீரர்கள் நேற்று கார் மூலம் அசாமில் இருந்து மேகாலயாவுக்கு புறப்பட்டு சென்றனர்.

இந்நிலையில் அசாம் தலைநகர் கவுகாத்தில் இருந்து மேகாலயாவின் ஷிலாங்க் நோக்கி கார் சென்றுகொண்டிருந்தது. மேகாலயாவின் ஷாங்க்பங்க்லா என்ற பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது சாலையின் எதிரே வந்த லாரி வீரர்கள் பயணித்த கார் மீது அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது.

எதிர்பாராத இந்த கோர விபத்தில் இளம் வீரர் தீனதயாளன் விஷ்வா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த கார் டிரைவர் மற்றும் எஞ்சிய 3 வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், விபத்தில் படுகாயமடைந்த கார் டிரைவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கார் விபத்தில் உயிரிழந்த தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் தீனதயாளன் விஷ்வாவின் உடல் இன்று விமானம் மூலம் சென்னைக்கு கொண்டுவரப்பட உள்ளது. மாநில மற்றும் தேசிய அளவில் டேபிள் டென்னிஸ் போட்டியில் பங்கேற்று பல்வேறு விருதுகளை வென்றுள்ள இவர் சென்னை லயோலா கல்லூரியில் பிகாம் படித்துள்ளார்.

இளம் டேனின்ஸ் வீரர் மரணம் அடைந்தது அடுத்து அரசியல் கட்சி தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்திய  டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு தலைவர் துஷ்யந்த் சவுத்ரி , விபத்தில் உயிரிழந்த விஷ்வா தீனதயாளன் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்த தோடு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அத்துடன் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஓர் இளம் வீரர் நம்பிக்கை நட்சத்திரத்தின் அகால மரணம் அதிர்ச்சி அளிக்கிறது.  அவரை  இழந்து வாடும் குடும்பத்தினர்,  நண்பர்கள் மற்றும் சக வீரர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் தொடர்ந்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில்,  இது ஒரு பெருந்துயரம். தமிழகத்தின் கனவுகளில் ஒன்று நின்று போனது. எனது ஆழந்த இரங்கல்! என்று பதிவிட்டுள்ளார். அதேபோல் கரூர் எம்.பி. ஜோதிமணி,  "மேகாலய மாநிலத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன் உயிரிழந்தார் என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது. அவரது குடும்பத்திற்கும், நம் நாட்டிற்கும் பேரிழப்பு. எனது ஆழந்த இரங்கல்! " என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

அதனைத்தொடர்ந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தமிழகத்தைச்  சேர்ந்த இளம் டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன் சாலை விபத்தில் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியும்  துயரமும் அளிக்கிறது.  

தேசிய  மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பதக்கங்கள் வென்றுள்ள விஸ்வா, எதிர்காலத்தில் சாதனைகளைச் செய்திடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்படி மரணம் நேரிட்டிருப்பது வேதனை தருகிறது. அவரது மறைவால் வாடும்  குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். தமிழக வீரர் தீனதயாளன் விஷ்வா கார் விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.