சென்னை ஓமந்தூராா் அரசினா் தோட்ட வளாகத்தில் முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியின் 16 அடி உயர சிலையை, குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு சற்று முன்னதாக திறந்து வைத்தார்.

ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை இன்று திறக்கப்படுவதை முன்னிட்டு, சென்னை மெரினாவில் அமைந்து உள்ள கருணாநிதி நினைவிடத்தில், “ஊருக்காக வாழ்ந்தவர் சிலையானார்; உழைப்பின் கைகளால் உயிரானார்” என்று, மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது.

சென்னையில் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட பல்வேறு திரைப்பிரபலங்களும் பங்கேற்றனர்.

அதே போல், கே.எஸ்.அழகிரி, வைகோ, திருமாவளவன், நடிகர்கள் சத்யராஜ், நாசர் உள்ளிட்டோரும் கலைஞர் சிலை திறப்பு விழாவில் கலந்துகொண்டனர். 

இந்த விழாவில், “நவீன தமிழ்நாட்டின் சிற்பி” என்ற தலைப்புடன், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பற்றிய காணொளி தொகுப்பு ஒன்றும் இந்த விழா மேடையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

அதன் தொடர்ச்சியாகவே, சென்னை ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் சிலையை, குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்.

அதன்படி, கலைஞர் கருணாநிதியின் சிலைக்கு கீழ் 5 கட்டளைகள் பொறிக்கப்படு இருந்தன.

- வன்முறையை தவிர்த்து வறுமையை வெல்வோம் 
- அண்ணா வழியில் அயராது உழைப்போம் 
- ஆதிக்கமற்ற சமுதாயமே அமைத்தே தீருவோம் 
- இந்தி திணைப்பை எதிர்ப்போம் 
-மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி
என்கிற வாசகங்கள் பொறிக்கப்பட்டு உள்ளன.

பின்னர், இந்த விழாவில் முதல் நபராக பேசிய அமைச்சர் துரைமுருகன், “திராவிட இயக்கத்தை 50 ஆண்டு காலம் தன் தோளில் சுமந்த தலைவர் கருணாநிதி” என்று, பெருமையோடு குறிப்பிட்டார். 

“அவரின் சிலையை திறந்து வைத்து நம்மையெல்லாம் மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியுள்ளார் குடியரசு துணைத் தலைவர் வெங்கைய்யா நாயுடு என்றும், நம்மைப் பொறுத்தவரை இந்நாள் ஒரு பெருநாள், கருணாநிதியின் சிலையைப் பார்த்த உடன் நெஞ்சம் உருகிவிட்டது” என்றும், மகிழ்ச்சி பொங்க பேசினார் 

“நேரில் பேசுவதைப் போலவே சிலை வடிவமைக்கப்பட்டு உள்ளது என்றும், சிலையைப் பார்த்து விட்டு கண்ணீர் விடாமல் வெளியே வரமுடியவில்லை” என்று நெகிழ்ந்து பேசினார் அமைச்சர் துரைமுருகன்.

பின்னர், மு.கருணாநிதி சிலை திறப்பு நிகழ்ச்சியில், கருணாநிதியின் மார்பளவு சிலையை வெங்கையா நாயுடுவுக்கு நினைவுப் பரிசாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இதனிடையே, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கலைஞர் சிலை 14 அடி உயர பீடம் அமைக்கப்பட்டு, 16 அடி உயரத்தில் சிலை நிறுவப்பட்டு உள்ளது. முற்றிலும் வெண்கலத்தில் ஆன இந்த கலைஞர் சிலையானது, 2 டன் எடை கொண்டது என்றும், இந்த சிலை வைக்கும் இடத்தை சுற்றி சுமார் 5,300 சதுர அடியில் சுற்றுச் சுவர்  அமைக்கப்பட்டுள்ளதுடன், அழகிய பூங்கா, வண்ண விளக்குகள் உள்ளிட்ட அழகிய வேலைபாடுகளும் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.