“தேச விரோத சக்திகளிடமிருந்து தமிழ்நாட்டை காக்க வேண்டும்” என்று, திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது, தமிழகத்தின் எதிர் கட்சிகள் இடையே பேசும் பொருளமாக மாறி உள்ளது.

முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டக் கழகச் செயலாளர் மற்றும் பொறுப்பாளர்கள்கள் கூட்டம் இன்றைய தினம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக மாவட்ட செயலாளர்கள் உடன் ஆலோசனை மேற்கொண்டார். 

அதன்படி, இந்த கூட்டத்தில் ஜூன் 3 ஆம் தேதி அன்று, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 99 வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. 

பின்னர், “தமிழகம் முழுவதும் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் நடத்த வேண்டும்” உள்ளிட்ட சில தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. 

அதன்படி, நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து பார்க்கும் போது, “தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர், தங்கள் அயராத உழைப்பாலும், தமது குருதி வியர்வையைக் கொட்டியும், பண்படுத்தி வைத்து உள்ள தமிழ் நிலத்தில், சமூக நீதியும் மத நல்லிணக்கமும் செழித்துச் சிறந்திருப்பதைப் பார்த்துப் பொறுத்துக் கொள்ள இயலாமல், மதவாத நச்சு விதைகளைத் தூவிட எத்தனிக்கும், தேச விரோத அபாயகர சக்திகளையும், அவர்களுக்குத் துணை போகும் அடிமைகளையும், விலை போகும் வீணர்களையும் அடையாளம் காட்டி, அவர்களிடமிருந்து தாய்த் தமிழ்நாட்டை எந்தவித சேதாரமும் இன்றி, பாதுகாத்திடும் புதிய பட்டாளத்து சிப்பாய்களின் அணிவகுப்பை உருவாக்கிடும் வகையில், 'திராவிட மாடல் பயிற்சிப் பாசறை' கூட்டங்களை வெற்றிகரமாக நடத்தி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளுக்கு அரணாக நிற்க வகை செய்வோம்” என ஒருமனதாகத் தீர்மானம் செய்து உறுதி ஏற்கப்பட்டு உள்ளது. 

அதே போல், ஜூன் 3 ஆம் தேதி, முத்தமிழறிஞர் கலைஞரின் 99 ஆம் பிறந்தநாளை சிறப்பாக நடத்திடுவோம் என்றும், அந்த வகையில் “மானமிகு சுயமரியாதைக்காரன்” என்று, தந்தை பெரியாரிடம் கற்றுத் தெளிந்த இலட்சியப் பிடிப்பின் அடிப்படையில், அவரது மங்காப் புகழ் எப்போதும் நிலைத்திடும் வகையில், தமிழக அரசின் சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், குடியரசுத் துணைத் தலைவர் எம்.வெங்கையா நாயுடு, முத்தமிழறிஞர் கலைஞரின்  திருவுருவச் சிலையினைத் திறந்து வைக்கும் பெருமைமிகு நிகழ்வாக நடத்தவும், முத்தமிழறிஞர் கலைஞர் முழு உருவச் சிலையினை அரசின் சார்பில் நிறுவிடவும்” தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், “சமூகநீதி, சமச்சீரான வளர்ச்சி, சம உரிமை ஆகியவற்றை அடித்தளமாகக் கொண்ட அரசை வெற்றிகரமாக நடத்தி, இந்தியாவுக்கே முன்னோடியான திட்டங்கள் பலவற்றை வழங்கியவர் முத்தமிழறிஞர் கலைஞர்” என்றும், புகழராம் சூட்டப்பட்டது.