காதலிக்க மறுத்த சிறுமியை, காதலிக்க வற்புறுத்தி அவரது வாயில் இளைஞர் ஒருவர் விஷத்தை ஊற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் அடுத்து உள்ள செவல்குளம் கிராமத்தைச் சேர்ந்த தெய்வபாண்டி என்பவரின் மகன் 22 வயதான வேல்முருகன் என்ற இளைஞர், அந்த பகுதியில் வேலைக்கு எதுவும் செல்லாம் ஊர் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த சூழலில் தான், அதே பகுதியைச் சேர்ந்த 11 ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமியை 22 வயதான இந்த வேல்முருகன், ஒருதலை பட்சமாக காதலித்து வந்திருக்கிறார்.

ஆனால், வேல்முருகன் எத்தனையோ முறை தனது காலை சொல்லியும், அதனை அந்த 15 வயது சிறுமி, ஏற்க மறுத்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தான், நேற்று முன் தினம் 22 வயதான வேல்முருகன், சிறுமியின் வீட்டிற்கு சென்று, அங்கிருந்த சிறுமியிடம் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி இருக்கிறார். ஆனால், அந்த 15 வயது சிறுமி அப்போது கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார் 

இதனால், கடும் ஆத்திரம் அடைந்த ஒரு தலை காதலன் வேல்முருகன், அந்த 15 வயது சிறுமியை தகாத வார்த்தைகளால் கடுமையாக திட்டி கொலை மிரட்டல் விடுத்ததுடன், கொடூரத்தின் உச்சமாக தான் மறைத்து வைத்து இருந்த பூச்சிக்கொல்லி மருந்து என்னும் விஷத்தை, அந்த சிறுமியின் வாயில் பலவந்தமாக ஊற்றியதாகவும் கூறப்படுகிறது.

அத்துடன், அந்த இளைஞன், மீதம் இருந்த அந்த பூச்சிக்கொல்லி மருந்தை தானும் குடித்து விட்டு, கத்தியால் தனது இடது கையில் அறுத்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால், அந்த சிறுமியும், இந்த ஒரு தலை காதலனனும் அங்கேயே அடுத்தடுத்து மயங்கி சரிந்து விழுந்து உள்ளனர்.

இதனையடுத்து, அங்கு வந்த சிறுமியின் குடும்பத்தினர் இருவரும் மயங்கி கிடப்பதைப் பார்தது கடும் அதிர்ச்சியடைந்த நிலையில், உடனடியாக இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, இருவருக்கும் தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், இது தொடர்பாக சிறுமியின் குடும்பத்தினர் கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

இதனிடையே, ஒரு தலையாக காதலிக்க வற்புறுத்தி, சிறுமி வாயில் பலவந்தமாக விஷத்தை ஊற்றிய இளைஞர் தானும் கையை கத்தியால் அறுத்துக் கொண்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.