திருச்சியில் காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளரை வெட்டிக்கொன்றது ஏன் என்பது குறித்து கைதான மணிகண்டன் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக 56 வயதான பூமிநாதன் பணியாற்றி வந்தார். கடந்த இரு தினங்களுக்கு முன்னர் இரவு 2 மணிக்கு ரோந்து பணியில் பூமிநாதன் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியாக ஆடுகளுடன் இரு சக்கர வாகனத்தில் சென்றவர்களை தடுத்து நிறுத்த முயன்றபோது அவர்கள் நிறுத்தாமல் வேகமாக சென்றனர். 

இதனால்  ஆடு திருடர்களை துரத்தி சென்றபோது எஸ்.எஸ்.ஐ. பூமிநாதனை, மணிகண்டன் கொடூரமாக கொலை செய்தார். இது தொடர்பாக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளியை காவல்துறையினர் தேடி வந்தனர். 

விசாரணையில் ஆடு திருடுபவர்களே பூமிநாதனை கொலை செய்ததும் அவர் மொபைல் போனில் கடைசியாக கொடுத்த தகவல் அடிப்படையிலும் துப்பு துலங்கியது. இதையடுத்து, தஞ்சாவூர் மாவட்டம், கல்லணை அருகே உள்ள தோகூர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் 19 மற்றும் 9 - 14 வயதுடைய இரு சிறுவர்களை போலீசார் நேற்று அதிகாலை கைது செய்தனர்.

b5

ஆடு திருடியவர்களிடம் இருந்து பூமிநாதனை கொலை செய்ய பயன்படுத்திய அரிவாள் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட மூவரையும், மண்டையூர் காவல்நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் கைது செய்யப்பட்ட 9 வயது சிறுவன் ஐந்தாம் வகுப்பு படித்து வருவதும் 14 வயது சிறுவன் எட்டாம் வகுப்பு படித்து வருவதும் தெரிந்தது. இவர்கள் இருவரும் ஆடு திருடும் பழக்கம் கொண்ட மணிகண்டனின் உறவினர்கள் எனத் தெரிகிறது.

இந்நிலையில் எஸ்.எஸ்.ஐ பூமிநாதனை கொலை செய்த மணிகண்டன் கொடுத்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறுகையில், “கைதான மணிகண்டன் ஆடுகளை திருடி விற்பனை செய்வதை வழக்கமாக கொண்டவர். ஆடுகளை சமயபுரம் ஆட்டு சந்தை உள்ளிட்ட சந்தைகளிலும், இறைச்சி கடைகளிலும் விற்று வந்துள்ளார். இதற்கு துணையாக உறவுமுறையான 14 வயது சிறுவனையும் அழைத்துக்கொண்டு சென்றுள்ளார். 

பல இடங்களில் திருடியும் இதுவரை அவர் போலீசாரிடம் சிக்காமல் இருந்துள்ளார். இந்நிலையில் தான் சம்பவத்தன்று தோகூரில் ஒரு ஆட்டை திருடிக்கொண்டு இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளனர். அப்போது தான் பூமிநாதன் வழிமறித்தபோது வண்டியை நிறுத்தாமல் வேகமாக தப்பிச்சென்றிருக்கிறார். அதேநேரத்தில் வண்டியில் இருந்த 2 சிறுவர்களையும் ஆட்டை இறுக பிடித்துக்கொண்டு இருக்க கூறியிருக்கிறார்.

b2

சுரங்கப்பாதையில் தண்ணீர் இருந்ததால் தப்பி செல்ல வழியில்லாமல் சிக்கிக்கொண்டார். மணிகண்டனின் தாய்க்கு எஸ்.எஸ்.ஐ. பூமிநாதன் போன் செய்து தகவல் தெரிவித்ததால், கைதாகி சிறைக்கு சென்றுவிடுமோ? என மணிகண்டன் அச்சமடைந்துள்ளார். அப்போது கல்லால் பூமிநாதனின் தலையில் தாக்கியும், தனது இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த அரிவாளை எடுத்தும் அவரது தலை, கழுத்தில் பலமாக வெட்டியுள்ளார். 

இதில் ரத்த வெள்ளத்தில் பூமிநாதன் சாய்ந்ததும் மற்ற 2 சிறுவர்களும் அதிர்ச்சியடைந்திருக்கின்றனர். கொலை செய்த உடன் அதே  இருசக்கர வாகனத்தில் 3 பேரும் தப்பிச்சென்றனர். மணிகண்டனின் உறவினர் ஒருவர் இறந்த துக்க காரிய நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டி இருந்ததால் செலவுக்காக ஒரு ஆட்டை திருடியிருக்கின்றனர். அந்த ஆட்டை கீரனூர் பகுதியில் ஒருவரிடம் மணிகண்டன் விற்றிருக்கிறார்” இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

திருச்சி டி.ஐ.ஜி., சரவண சுந்தர் அளித்த பேட்டியில், “திருடர்களை துரத்திச் சென்ற பூமிநாதன், காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்து, இரண்டு போலீசாரை உதவிக்கு அழைத்துள்ளார். அவர்கள் வருவதற்கு தாமதமானதால் கொலை நடந்துள்ளது. அப்போது, மணிகண்டன் மட்டும் குடி போதையில் இருந்துள்ளார். மற்ற இருவரும் போதையில் இல்லை.

b4

போலீசிடம் பிடிபட்டு விடுவோம் என்ற பயத்தில், மூன்று பேரும் சேர்ந்து கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர். முதல் குற்றவாளியான மணிகண்டன் மட்டும் கீரனுார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார். மற்ற இரண்டு சிறுவர்களும், குழந்தை மற்றும் சிறார் நீதி குழுமத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்படுவர்.

போலீஸ் தரப்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்கள் அடிப்படையில, குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை வாங்கி தரப்படும்” எனத் தெரிவித்தார்.