“கொடைக்கானலில் கூடாரம் அமைத்துத் தங்குவது தடை செய்யப்படுவதாக” மாவட்ட நிர்வாகம் அதிரடியாக அறிவித்து உள்ளது, இளம் ஜோடிகளிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

தமிழ்நாட்டில் மலைகளின் இளவரசியாக கொடைக்கானல் வர்ணிக்கப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் எப்போதும் வந்து செல்வது வாடிக்கையாக உள்ளது.

அதுவும் கொடைக்கானலில் உள்ள கோக்கர்ஸ் வாக், பியர் ஷோலா நீர்வீழ்ச்சி, பிரையண்ட் பூங்கா, கொடைக்கானல் ஏரி, சூசைட் பாயிண்ட், செண்பகனூர் அருங்காட்சியம், கொடைக்கானல் அறிவியல் நகரம், தூண் பாறைகள், குணா குகைகள், வெள்ளி நீர் வீழ்ச்சி, டால்பின் நோஸ், குறிஞ்சி ஆண்டவர் கோயில், பேரிஜம் ஏரி போன்ற பல சுற்றுலாத் தலங்கள் அங்கு இயற்கை எழில் கொஞ்சும் அழகுடன் அமைந்திருக்கிறது.

இவற்றைப் பார்க்க வரும் சுற்றுலா பயணிகளில் இளம் ஜோடிகள் சிலர், கொடைக்கானலில் புது விதமாகக் கூடாரம் அமைத்துத் தங்கி, தங்களது சுற்றுலாவை இன்னும் சிறப்பாக்கினார். இதனால், காலப்போக்கில் கொடைக்கானலில் புது விதமாகக் கூடாரம் அமைத்துத் தங்கும் கலாச்சாரம் அதிகரித்தது.

அதன்படி, கொடைக்கானல் மலை பகுதிகளில் உள்ள நிலங்கள் மற்றும் வனப்பகுதியை ஒட்டி கூடாரங்கள் அமைத்து தங்கி வந்தனர்.

ஆனால், நிலங்கள் மற்றும் வனப்பகுதியை ஒட்டி கூடாரங்கள் அமைத்துத் தங்கி வந்ததால், அங்கு வனவிலங்குகள் மூலம் சுற்றுலாப் பயணிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழலும் தற்போது உருவாகி இருக்கிறது. 

கொடைக்கானல் மலைப் பகுதியில் கூடாரம் அமைப்பதற்கு ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டு இருக்கும் நிலையில், சுற்றுலா பயணிகளோ தொடர்ந்து கூடாரம் அமைத்துத் தங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் தான், “தமிழக அரசின் தடையை மீறி கூடாரம் அமைத்தால் அந்த நிலத்தின் உரிமையாளர்கள் மற்றும் கூடாரம் அமைப்பவர்கள் மீது காவல் துறை மூலம் மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று, கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

இதனிடையே, “கொடைக்கானலில் கூடாரம் அமைத்துத் தங்குவது தடை செய்யப்படுவதாக” மாவட்ட நிர்வாகம் அதிரடியாக அறிவித்து உள்ளது, இந்தியா முழுவதும் உள்ள இளம் ஜோடிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.