“தமிழகத்தில் இரு மொழிக்கொள்கையே பின்பற்றப்படும் என்றும், ஆனால் இந்தி படிப்பதை யாரும் தடுக்கவில்லை” என்றும், உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதிப்படத் தெரிவித்து உள்ளது.

தமிழ்நாட்டில் இன்றைய தினம் மொழிப்போர் தியாகிகள் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

அதன் படி, மொழிப்போர் தியாகிகள் நாளையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் மொழிப்போர் தியாகிகள் உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அதன் தொடர்ச்சியாக, திமுக எம்.பி. கனிமொழி, “ஆதிக்க மொழியை எதிர்த்து, தாய்மொழி தமிழுக்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த மொழிப்போர் வீரர்களின் நினைவு நாளான இன்று, அவர்களின் தியாகத்தையும் நினைவையும் உலகத் தமிழர் அனைவரும் போற்றிடுவோம்” என்றும், புகழாரம் சூட்டி உள்ளார். 

அதே போல், மொழிப்போர் தியாகிகள் தினத்தை முன்னிட்டு தமிழுக்காக உயிர்த் தியாகம் செய்த தியாகிகளின் உருவப்படத்திற்கு சேலத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.

இந்த நிலையில் தான், சென்னை உயர் நீதிமன்றத்தில் கடலூரைச் சேர்ந்த ஆலமரம் என்ற தனியார் தொண்டு நிறுவனத்தின் செயலாளர் அர்ஜுன் இளையராஜா என்பவர், ஒரு வழக்குத் தொடர்ந்திருந்தார்.

அதில், “தமிழகத்தில் தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த உத்தரவிடக் கோரி” இந்த வழக்கினைத் தொடர்ந்திருந்தார். 

இந்த வழக்கானது, பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் பண்டாரி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. 

அப்போது பேசிய நீதிபதிகள், “தமிழகத்தில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தமிழக அரசு எடுக்க வேண்டிய கொள்கை முடிவு தான். இருப்பினும், மாணவர்கள் ஒரு மொழியை கூடுதலாக தெரிந்துகொள்வது நல்லது தான்” என்று, குறிப்பிட்டனர்.

அத்துடன், “தமிழகத்தை தவிர பல்வேறு மாநிலங்கள் இந்த புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்திப்பட்டு உள்ளன” குறிப்பிட்ட நீதிபதி அமர்வு, “இந்தி கற்றுக் கொள்ளாமல், தமிழகத்தில் இருந்து வெளியே செல்லும் மாணவர்கள் அங்கு மொழி தெரியாமல் சிரமப்படுவதை கருத்தில் கொண்டு, மும்மொழி கொள்கையை ஏன் அரசு அமல்படுத்தக்கூடாது?” என்றும், அடுக்கடுக்கான கேள்வியை எழுப்பினர். 

இதற்கு பதிலளித்த அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், “தமிழகத்தில் இந்தியை கற்றுக் கொள்ள யாருக்கும் தடை விதிக்கப்படவில்லை” என்று, பதில் அளித்தார்.

அதே நேரத்தில், “தமிழ்நாட்டில் இரு மொழி கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று தான், தமிழக அரசு கொள்கை முடிவாக எடுத்து உள்ளது” என்றும், சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பிளான விளக்கத்தை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், தெரிவித்தார்.

இதையடுத்து, இந்த மனு தொடர்பாக 4 வாரங்களில் பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதனிடையே, திமுக எதிர்க்கட்சியாக இருந்த போதிலும் சரி, தற்போது ஆளுங்கட்சியாக மாறிய போதிலும் சரி, மத்திய அரசின் தேசிய கல்விக்கொள்கைக்கு எதிராகவே திமுக இருந்து வருகிறது. 

இதனையே, தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி ஆகியோரும் தங்களது பேட்டிகள் மூலமாக அடிக்கடி உறுதிப்படுத்தும் விதமாக பேசி வருவதும் குறிப்பிடத்தக்கது.