தமிழ் திரையுலகில் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவராக விளங்கும் நடிகர் தனுஷ் தனது கடின உழைப்பால் கோலிவுட்டை கடந்து பாலிவுட், ஹாலிவுட் என கலக்கி வருகிறார். அந்த வகையில் ஹாலிவுட்டில் அவெஞ்சர்ஸ் எண்டு கேம் படத்தின் இயக்குனர்களான ரூசோ பிரதர்ஸ் இயக்கத்தில் நேரடியாக நெட்ஃபிலிக்ஸில் வெளியாகவுள்ள தி க்ரே மேன்  படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

முன்னதாக இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்த மாறன் திரைப்படம் நிறைவடைந்து வருகிற பிப்ரவரி மாதம் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ரிலீசாக உள்ளது. தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தயாராகும் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் நடித்து வருகிறார் தனுஷ்.

தொடர்ந்து மீண்டும் இயக்குனர் செல்வராகவனுடன் இணைந்துள்ள தனுஷ், கலைப்புலி.எஸ்.தாணு அவர்களின் தயாரிப்பில் உருவாகும் நானே வருவேன் திரைப்படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே முதல்முறையாக தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளில் தயாராகும் புதிய திரைப்படமான வாத்தி (தெலுங்கில் SIR) திரைப்படத்தையும் நடிகர் தனுஷ் தொடங்கியுள்ளார்.

இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் உருவாகும் வாத்தி படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் இணைந்து தயாரிக்கின்றனர். தனுஷுடன் இணைந்து சம்யுக்தா
 மேனன் கதாநாயகியாக நடிக்க, சாய்குமார், தனிக்கெல்லா பரணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

இந்நிலையில் ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன் திடீரென வாத்தி படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில், “தவிர்க்கமுடியாத காரணங்களால் வாத்தி படத்தின் ஒரு அங்கமாக பணிபுரிய முடியவில்லை, சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் உடன் இணைந்து விரைவில் பணிபுரிய விரும்புகிறேன்..#COVID”  என தெரிவித்துள்ளார்.  எனவே வாத்தி படத்தின் புதிய ஒளிப்பதிவாளர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.