கொரோனா பரவல் காரணமாக சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் கலைநிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 4 அலங்கார ஊர்திகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

republic day

நாடு முழுவதும் 73-வது குடியரசு தின விழா ஜனவரி 26-ம் தேதி கொண்டாடப்படுகிறது. தமிழக அரசு சார்பில் சென்னையில் மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை முன்பு குடியரசு தின விழா நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்காக அங்கு பிரமாண்ட மேடை அமைக்கும் பணி நடந்துவருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பின்பு நடைபெற உள்ள முதல் குடியரசு தின விழா இதுவாகும். 26-ம் தேதி காலை 8 மணிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியை ஏற்றி வைக்கிறார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வீர தீரச் செயல் புரிந்தவர்களுக்கு பதக்கங்களை அணிவிக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் இந்த ஆண்டு குடியரசு தின விழாவுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக, கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதேபோன்று அரசு துறைகளின் அலங்கார ஊர்தி அணிவகுப்பும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் தமிழகத்தின் சார்பில் அனுப்பப்பட இருந்த வீரமங்கை வேலு நாச்சியார், வ.உ.சிதம்பரனார் உள்ளிட்டோரின் அலங்கார அணிவகுப்பு ஊர்திக்கு அனுமதி கிடைக்காததால் அந்த அலங்கார ஊர்திகள் சென்னையில் நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்கும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி மெரினா கடற்கரையில் நடைபெறும் குடியரசு தின விழாவின்போது 4 அலங்கார ஊர்திகள் மட்டும் அணிவகுத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் முதலாவது அலங்கார ஊர்தியாக செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் வடிவமைக்கப்பட்டுள்ள ஊர்தி இடம் பெறுகிறது.  அதில், தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரி குழுவினரின் நாதஸ்வரம், தவில், வீணையுடன் கூடிய மங்கள இசை இடம் பெறுகிறது. அதே அலங்கார ஊர்தியில் மங்கள இசைக்கு ஏற்ப பரதநாட்டிய நிகழ்ச்சி நடக்கிறது. இதுதவிர வள்ளுவர்கோட்டம் தேர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்பு நிகழ்ச்சி குறித்த புகைப்படங்கள், அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் சாதனைகள் பற்றிய புகைப்படங்கள் இடம் பெறுகின்றன.

2-வது அலங்கார ஊர்தியில் வீரமங்கை வேலு நாச்சியார், மருது சகோதரர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன் அழகு முத்துக்கோன், பூலித்தேவன், ஒண்டிவீரன், வீரன் சுந்தரலிங்கம், குயிலி ஆகியோரது சிலைகளுடன் வேலூர் கோட்டை, காளையார்கோவில் கோபுரம் ஆகியவை இடம் பெறுகின்றன. 3-வது அலங்கார ஊர்தியில், சுதந்திரத்துக்காக பாடுபட்ட வ.உ.சி. செக்கு இழுக்கும் நிகழ்வு, பாரதியார், சுப்பிரமணிய சிவா, ராகவாச்சாரி மற்றும் அவருடன் விடுதலைப் போரில் ஈடுபட்டவர்களை காட்சிப்படுத்தும் தத்ரூப சிலைகளுடன் சுதேசி கப்பலும் இடம் பெறுகிறது. 4-வது அலங்கார ஊர்தியில் பெரியார், ராஜாஜி, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், இரட்டைமலை சீனிவாசன், வ.வே.சு.அய்யர், வாஞ்சிநாதன், தீரன் சின்னமலை, திருப்பூர் குமரன், காமராஜர், காயிதே மில்லத், ஜோசப் சி குமரப்பா ஆகிய தலைவர்களை சித்தரிக்கும் சிலைகள் இடம பெறுகின்றன.

அதனைத்தொடர்ந்து இது தவிர மத்திய அரசின் சார்பில் தரைப்படை, கடற்படை, விமானப்படையின் சாதனைகளை வெளிப்படுத்தும் அலங்கார ஊர்திகளும் அணிவகுத்து வருகின்றன. போலீசாரின் அணிவகுப்பு நிகழ்ச்சிகள் முடிவடைந்ததும் அலங்கார ஊர்திகள் அணிவகுத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் மெரினா கடற்கரையில் ஒரு மணி நேரம் நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு 35 நிமிடத்தில் விழாவை முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.