2022 ஆம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டில் தந்தை பெரியாரின் சிந்தனைகள் அடங்கிய தொகுப்பை 27 மொழிகளில் பதிப்பிட 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ள நிலையில், தமிழ் வளர்ச்சித்துறைக்கு 82.86 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலையில் தொடங்கியதும், எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர். இதற்கு இடையேதான், 2022-23 ஆம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.

அப்போது பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், “தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறை இம்முறை 7000 கோடி ரூபாய் குறைய உள்ளது என்றும், இது கடந்த 8 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறை குறைகிறது” என்றும், அவர் சுட்டிக்காட்டி பேசினார்.

குறிப்பாக, “ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வந்த மாநிலத்தின் வருவாய் பற்றாக்குறை இந்த ஆண்டு முற்றிலுமாக குறைய உள்ளது” என்றும், சுட்டிக்காட்டி பேசினார்.

முக்கியமாக, “உக்ரைன் போர் காரணமாக பொருளாதார மீட்டெடுப்பு பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும், மத்திய அரசு தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி நிலுவைத் தொகையால் 20,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும்” என்றும், சட்டப் பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சுட்டிக்காட்டி பேசினார்.

மேலும், “சமூகத்தின் அனைத்து பிரிவினரின் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றும் விதமாக, இந்த ஆண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டு உள்ளது என்றும், சமூக நல திட்டங்களுக்கு அதிக முன்னுரிமை கொடுக்கப்பட்டு உள்ளது” என்றும், அவர் தெரிவித்தார்.

அதன்படி,

- “தமிழ்நாட்டில் சமூகநீதியை நிலை நிறுத்தவும், பகுத்தறிவை பரப்பிடவும், பெண் அடிமைத்தனத்தை ஒழித்திடவும் தம் கடைசி மூச்சு இருக்கும் வரை அயராது உழைத்தவர் தந்தை பெரியார்” என்று, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசினார்.

- “திராவிட மாடலின் இலக்கணமாக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் திகழ்கிறார்” என்று குறிப்பிட்ட நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தமிழ் சார்ந்தும், கல்வி சார்ந்தும், அறிவு சார்ந்தும் தொடர்ந்து பல திட்டங்களை அறிவித்தார்.  

- “தமிழ் மொழியை போற்றி உலகெங்கும் பரவ செய்வதே திமுக அரசின் முதன்மையான குறிக்கோள்” என்றும், அவர் கூறினார். 

- இதனால், தந்தை பெரியாரின் சிந்தனைகள் அடங்கிய தொகுப்பு உலகில் உள்ள 27 மொழிகளில் பதிப்பிட  5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவித்தார்.

- தமிழ் மொழி தொடர்பாக அகரமுதலி திட்டத்திற்கு 2 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அவர் அறிவித்தார்.

- நாட்டின் வளர்ச்சியில் தமிழ்நாடு அரசின் பங்களிப்பு 10 சதவீதம் அளவாக உள்ளது என்றும், அவர் கூறினார்.

- போதை பொருட்களை ஒழிக்க அரசு தொடர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்றும், சமூக வலைத்தளங்களில் ஏற்படும் குற்றங்களை தடுக்க சமூக ஊடக சிறப்பு மையம் அமைக்கப்படும் என்றும், அறிவிக்கப்பட்டு உள்ளது.

- கோவை, வேலூர், பெரம்பலூரில் புதிதாக தொழிற்பூங்காக்கள் அமைக்கப்படும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

- தமிழ்நாட்டில் 7 இடங்களில் அகழாய்வு செய்யப்படும் என்றும், தொல்லியல் ஆய்வுகளுக்காக 7 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

- விழுப்புரம், ராமநாதபுரத்தில் 10 கோடி ரூபாய் செலவில் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.

 - 125 கோடி செலவில் புதிய நூலகங்கள் அமைக்கப்படும் என்றும், அறிவிக்கப்பட்டு உள்ளது.

- விளிம்புநிலை பழங்குடியின மக்களுக்கு 443 வீடுகள் கட்ட 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு. 

- மாற்றுத்திறனாளிகள் நலன் மேம்பாட்டிற்கு 838 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

- வள்ளலார் பல்லுயிர் காப்பகம் என்னும் புதிய திட்டம் உருவாக்கப்படும்.

- தவறான பிரசாரத்தை தடுக்க சமூக ஊடக சிறப்பு மையம் உருவாக்கப்படும்.