அதிமுக தொண்டர்களுடன் சசிகலா தொடர்ந்து பேசி வரும் ஆடியோக்கள் வெளியாகி வருவதற்குப் பதிலடி தரும் விதமாக, அமமுக நிர்வாகிகளை அதிமுக குறி வைத்து உள்ளதாகத் தகவல்கள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சசிகலா அரசியல் ரீ என்ட்ரியின் முன்னோட்ட காட்சிகள் எல்லாம் தமிழக அரசியலில் ஒவ்வொன்றாக தற்போது அரங்கேறி வருகின்றன.

அதன் படி, தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அதிமுக தொண்டர்கள் இடையே சசிகலா தொலைப்பேசியில் பேசி வரும் உரையாடல்கள் ஒவ்வொன்றாக வெளியாகி வருவது, அக்கட்சியினரிடையே பெரிய அளவில் பேசும் பொருளாக மாறியிருக்கிறது. 

சசிகலாவின் இந்த செயல்பாடுகள் அதிமுக தலைமைக்கான செக் வைக்கும் நடவடிக்கை என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வந்த நிலையில், தற்போது அமமுக வினரை மீண்டும் அதிமுகவில் சேர்ப்பதன் மூலமாக, சசிகலாவிற்கு தக்க பதிலடி கொடுக்க அதிமுக தலைமை திட்டமிட்டுக் காய் நகர்த்தி வருவதாகவும் பேசப்பட்டு வருகிறது.

அதன் படி, திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் பொன்ராஜா, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியிலிருந்து விலகி மீண்டும் தாய் வீடான அதிமுகவில் மாவட்ட கழக செயலாளர் பலராமன், முன்னாள் அமைச்சர் மாதவரம் மூர்த்தி ஆகியோர் உடன் சென்று அதிமுக இணைந்து உள்ளார்.

அதுவும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில், அவர் கட்சியில் இணைத்துக் கொண்டார். அதிமுகவில் இணைந்துள்ள பொன்ராஜா, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளராகப் பதவி வகித்து வந்தார்.

முக்கியமாக, தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, அதிமுக நிர்வாகிகளை சசிகலா சந்திக்க முடிவு செய்திருந்த நிலையில் தான், திருவள்ளூர் மாவட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், திருவள்ளூர் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் பொன்னேரி சட்டமன்றத் தேர்தல்களில் டிடிவி தினகரனின் ஆதரவாளராக இருந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிட்ட முன்னாள் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் பொன் ராஜா அக்கட்சியில் இருந்து விலகி, மீண்டும் அதிமுகவில் இணைந்து இருப்பது அரசியல் வட்டாரத்தில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

குறிப்பாக, சசிகலா அணியினராகக் கருதப்படும் அமமுக கட்சி நிர்வாகிகளை, அதிமுக தலைமை தற்போது குறி வைத்திருப்பது சசிகலாவிற்கான பதிலடியாகவே தமிழக அரசியலில் பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, திருவள்ளூர் கிழக்கு மாவட்டச் செயலாளராக இருந்த முன்னாள் எம்எல்ஏ பொன் ராஜாவிற்கு பதிலாக, பி.வி.சங்கர் ராஜாவை மாவட்ட கழக செயலாளராக அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நியமித்துஉள்ளார்.

அதே நேரத்தில், இனி வரும் நாட்களில் அதிமுகவில் சசிகலா எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறார்?” என்று, ஒட்டு மொத்த அரசியல் கட்சிகளும் தற்போது உற்று நோக்க ஆரம்பித்து உள்ளன. 

இதனிடையே, தமிழக சட்டமன்ற தேர்தல் தோல்வியாலும், தலைமைகளுக்குள் ஏற்பட்ட விரிசல் காரணமாகவும் அதிமுகவில் சற்று குழப்பமான சூழல் நிலவி வந்த நிலையில், சசிகலாவின் அரசியல் எண்ட்ரி சரியான தருணம் தான் என்று பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில் தான், சசிகலாவுக்கு பதிலடி தரும் விதமாக, அமமுக நிர்வாகிகளை அதிமுக குறி வைத்து உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்து உள்ளது.