“பேய்கள் என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டுவதாக”விவசாயி ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குஜராத்தில் மாநிலத்தில் தான், இப்படி ஒரு பரபரப்பு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

குஜராத் மாநிலம் பாஞ்ச்மஹல் மாவட்டம் ஜம்புகோடா தாலுகாவைச் சேர்ந்த 35 வயது விவசாயி, தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவர், தனக்கு சொந்தமான விவசய நிலத்தில் விவசாயம் பார்த்து வருகிறார்.

இந்த நிலையில், நேற்றைய தினம், அங்குள்ள காவல் நிலையத்திற்கு ஓடோடிச் சென்ற அந்த விவசாயி, புகார் அளிக்க வேண்டும் என்று, போலீசாரிடம் ஓடிய வேகத்தில் மூச்சு முட்ட கேட்டு உள்ளார். அத்துடன், உடம்பு முழுக்க பதட்டத்துடன் காணப்பட்ட அந்த விவசாயை, அமர வைத்து  சற்று ஆசுவாசப்படுத்தி போலீசார், “என்ன நடந்தது? யார் மீது புகார் அளிக்க வேண்டும்?” என்று, அந்த விவசாயிடம் விசாரித்து உள்ளனர்.

அப்போது, அவர் கூறியதை கேட்டு அந்த போலீசார் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

அதாவது, விவசாயி என்ன கூறினார் என்றால், “நான் தோட்டத்தில் வேலை செய்யும் போது, என்னை வேலை செய்ய விடாமல், 2 பேய்கள் தொடர்ந்து தொந்தரவு செய்வதாகவும், என்னை தொடர்ந்து மிரட்டி வருகிறது” என்றும், கூறி உள்ளார்.

அத்துடன், “அதையும் மீறி நான் அங்கு வேலை செய்யும் போது, அந்த இரு பேய்களளும் என்னை கொலை செய்ய முயல்வதாகவும், ஆனால், அந்த பேய்களிடம் இருந்து நான் இங்கு தப்பித்து வந்து விட்டேன்” என்றும், அவர் படபடப்புடன் கூறியிருக்கிறார்.

இதனைக் கேட்ட போலீசார், அந்த விவசாயியை பார்த்து உள்ளனர்.

அப்போதும் மேலும் பேசத் தொடங்கிய அந்த விவசாயி, “எனக்கு மிரட்டல் விடுக்கும் பேய்கள் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும்” என்றும், அந்த விவசாயி போலீசாரை வற்புறுத்தி உள்ளார். 

இதைக் கேட்ட அந்த காவல் நிலையத்தில் இருந்த போலீசார் அனைவரும், அந்த விவசாயின் பரிதாப நிலையைப் பார்த்து, அவரை சற்று அமைதிப்படுத்தும்
விதமாக, புகார் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

இதனையடுத்து, அந்த விவசாயின் குடும்பத்தினரை அழைத்து போலீசார் விசாரித்து உள்ளனர். அப்போது, “அந்த விவசாயி, சற்று மன நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக” தெரிவித்து உள்ளனர்.

முக்கியமாக, “கடந்த 10 நாட்களாக அவர், மாத்திரை எடுத்துக் கொள்ளாமல் இருப்பதாகவும், இதன் காரணமாகவே, அந்த விவசாயி, இப்படியாக செயல்படுவதாகவும், அவரது குடும்பத்தினர்” போலீசாரிடம் தெரிவித்தனர்.

இதனையடுத்து, அந்த விவசாயின் குடும்பத்தாருக்கு போலீசார் புத்திமதி கூறி, மனம் நலம் பாதிக்கப்பட்ட அந்த விவசாயை, அவரது குடும்பத்தினருடன் போலீசார் அனுப்பி வைத்தனர். 

அதே நேரத்தில், இந்த நிகழ்வையும், அந்த விவசாயின் புகார் பற்றியும் போலீசார் மிகவும் பொறுமையுடனும், பக்குவமுடனும் கையாண்ட விதம் பற்றி அந்த பகுதி மக்கள் பலரும் தங்களது பாராட்டுக்களைத் தெரிவித்து உள்ளனர். 

எனினும், விவசாயி ஒருவர், பேய்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்த சம்பவம், அந்த மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.