மனைவியைப் பிரிந்த நிலையில் இளம் பெண்ணை காதலித்த இளைஞன், அந்த பெண்ணோடு ஏற்பட்ட பிரச்சனையில் காதலியின் கழுத்தை அறுத்து விட்டு, தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் பகுதியில் தான், இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த 27 வயதான வெங்கடேஷ் என்ற இளைஞர், ஏற்கனவே திருமணமான நிலையில், தன் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, தன் மனைவியைப் பிரிந்து தனியாக வசித்து வந்தார். அத்துடன், சென்னையில் தங்கி அவர் ஓட்டுநராகவும் பணி ஆற்றி வந்தார். 

இப்படி, அவர் தனிமையில் வாழ்ந்துகொண்டிருந்த நிலையில், 21 வயதான இளம் பெண் எழில் மதியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், அவர்களுக்குள் நட்பு மலர்ந்த நிலையில், அதன் தொடர்ச்சியாக அவர்களுக்குள் காதல் மலர்ந்துள்ளது. 

அதன் படி, கடந்த ஒரு வருட காலமாக அவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளனர். ஆனால், காதலி எழில்மதி, திருப்பூரில் வேலை பார்த்து வந்திருக்கிறார்.

இந்த சூழலில், காதலி எழில் மதியைப் பார்ப்பதற்காகச் சென்னையிலிருந்து வெங்கடேஷ், திருப்பூருக்கு வந்துள்ளார்.

அதன் படி, வளர்மதி பாலம் அருகே உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த காதலன் வெங்கடேஷை பார்க்க, காதலி எழில் மதி வந்துள்ளார்.

அப்போது, காதலர்கள் இருவரும் அங்குள்ள ஒரு இடத்தில் நீண்ட நேரமாகப் பேசிக்கொண்டு இருந்தனர். திடீரென்று அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, கடும் கோபம் அடைந்த காதலன் வெங்கடேஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, கண் இமைக்கும் நேரத்தில் அருகில் நின்றிருந்த காதலி எழில் மதியின் கழுத்தை அறுத்து விட்டு, தானும் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலை முயன்றுள்ளார்.

இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, இருவரையும் மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, இருவருக்கும் தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், இது தொடர்பாக அந்த பகுதியின் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து விரைந்து வந்த போலீசார், விசாரணை நடத்தினர். 

அந்த விசாரணையில் தான், இந்த காதல் கதைகள் வெளிச்சத்திற்கு வந்தது. இதனையடுத்து, காதலன் வெங்கடேஷ் மீது திருப்பூர் தெற்கு மாவட்ட காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, இளம் பெண்ணின் கழுத்தை கத்தியால் அறுத்து விட்டு, காதலனும் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி செய்த சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதே போல், ஈரோடு கருங்கல்பாளையம் அருகே தனது மனைவியுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்த இளைஞரை, அப்பெண்ணின் கணவர் தன் தம்பிகளுடன் இணைந்து கத்தியால் குத்திய சம்பவம், அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியையும், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.