“நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு மிக விரைவில் விடுதலை கிடைக்கும்” என்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரைத்து உள்ளார்.

தமிழ்நாடு அரசியல் வரலாற்றில், ஆளுநர் திருப்பியனுப்பிய மசோதாவை மீண்டும் தாக்கல் செய்வதற்கு சிறப்பு கூட்டத்தொடர் நடத்தப்படுவது இதுவே முதன் முறை என்பது வரலாற்று நிகழ்வாக பார்க்கப்படும் தருணத்தில், நீட் விலக்கு மசோதா கடந்த மாதம் 2 ஆம் தேதி தமிழக சட்ட மன்றத்தல் மீண்டும் நிறைவேற்றப்பட்டது, இந்திய அளவில் பேசும் பொருளாக மாறியிருந்தது.

அதன் தொடர்ச்சியாக, அன்றைய தினமே இந்த மசோதா தமிழக ஆளுநருக்கு மீண்டும் அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் தான், சென்னை திருவான்மியூரில் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயத்தின் மகன் திருமணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று, தலைமையேற்று நடத்தி வைத்தார். 

அப்போது, அந்த திருமண விழாவில் மணமக்களை வாழ்த்தி பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ஏழை, எளிய, நடுத்தர மாணவர்களின் மருத்துவ கல்வி கனவை சிதைக்கும் நீட் தேர்வுக்கு விலக்கு பெற வேண்டும் என்று, சட்டமன்றத்தில் ஒரு மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தோம்” என்று, குறிப்பிட்டார்.

“ஆனால், பல மாதங்களாக அந்த மசோதான கிடப்பில் போடப்பட்ட நிலையில், அதன் பிறகு நீட் மசோதா திருப்பி அனுப்பப்பட்டது” என்றும், முதல்வர் கூறினார்.

தொடர்ந்து பேசிய முதலவர், “நேற்றைய சந்திப்பின் போது, நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பதாக ஆளுநர் உறுதி அளித்து உள்ளார் என்றும், நீட் விலக்கு மசோதாவை 2 வது முறை திருப்பி அனுப்ப முடியாது என ஆளுநர் தெரிவித்தார்” என்பதையும், முதலமைச்சர் சுட்டிக்காட்டினார். 

“இதன் மூலமாக, நாம் நீட் விலக்கு முயற்சியில் முதல் வெற்றி பெற்றுள்ளோம்” என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரைத்தார்.

“நீட் தேர்விற்கு விலக்கு பெறும் மசோதா என்ன நிலையில் இருக்கிறது என்று தெரியாமல் இருந்த நிலையில், ஆளுநர் அதனை சந்தித்த பிறகு இது தொடர்பான ஒரு வெற்றி செய்தி கிடைத்து உள்ளது” என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டினார்.

“நீட் தேர்வில் இருந்து நாட்டிற்கு விரைவில் விடுதலை கிடைக்கும் என்றும், ஆதலால் நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது” என்றும் முதலமைச்சர், உறுதிப்படத் தெரிவித்து உள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்ட இந்த திருமண விழாவில், சக அமைச்சர்களான துரை முருகன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மேலும், தி.க தலைவர் வீரமணி, காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, விசிக தலைவர் திருமாவளவன், சிபிஐ செயலாளர் முத்தரசன், ஆ.ராசா உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.