“சோனியா காந்தி குடும்பம் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி இருக்க வேண்டும்” என்கிற ஆதரவு குரலும், எதிர்ப்பு குரலும் தற்போது எழுந்து உள்ளது.

நடைபெற்று முடிந்த 5 மாநில தேர்தல் முடிவுகளில் பாஜகவின் தொடர் வெற்றியும், காங்கிரசின் தொடர் தோல்வியும் அவ்விரு கட்சிகளுக்கும் உணர்த்திய உண்மைகள் ஏராளம்.

நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்த உத்தரப் பிரதேச தேர்தலில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட காங்கிரஸ் கட்சி, நினைத்துக்கூட பார்க்காத வகையில், படு தோல்வியை அடைந்திருப்பது தான், அனைத்து தரப்பினரையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

அதிலும் குறிப்பாக, காங்கிரஸ் கட்சிக்கு 2 புள்ளி மூன்று எட்டு சதவிகிதம் மட்டுமே வாக்குகள் இந்த முறை கிடைத்து உள்ளன.

உத்தரப் பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், கோவா, உத்தரகாண்ட் ஆகிய ஐந்து மாநிலங்களில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், 4 மாநிலங்களில் பாஜக பெறும் வெற்றி பெற்று உள்ளது. 

பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி வெற்றி பெற்று உள்ளது. 

பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருந்த நிலையில், அங்கு ஆம் ஆத்மி கட்சியிடம் தங்களது ஆட்சியை பறிகொடுத்து தவிக்கிறது காங்கிரஸ் கட்சி. இதற்கு முன்பாக, காங்கிரஸ் கட்சியிடம் இருந்து தலைநகரான டெல்லியை ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றி இருந்த நிலையில், தற்போது 2 வது மாநிலமாக பஞ்சாப் மாநிலத்தை கைப்பற்றி உள்ளது. 

பஞ்சாப் மாநிலத்தில் வரலாறு காணாத படுதோல்வியை காங்கிரஸ் கட்சி சந்தித்து உள்ள நிலையில், அங்கு உள்ள 117 தொகுதிகளில் காங்கிரஸ் மொத்தமே 18 தொகுதிகளில் தான் வெற்றி பெற்றது.

இந்த நெருக்கடியான சூழலுக்கு மத்தியில் தான், சோனியா காந்தி தலைமையில் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்ற காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டம் நேற்று நடைபெற்றது. 

இந்தக் கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் தற்காலிகத் தலைவராக சோனியா காந்தி நீடிப்பார் என்று முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், “உத்தரப்பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், உத்தராகண்ட, கோவா ஆகிய 5 மாநிலங்களில் காங்கிரஸ் தலைவர்கள் ராஜினாமா செய்ய வேண்டும்” என்கிற உத்தரவை, சோனியா காந்தி அதிரடியாக வெளியிட்டார். 

அத்துடன், இந்த தேர்தல் தோல்வி குறித்து விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், இன்னும் பல தலைவர்களின் பொறுப்பு பறிபோகும் என்றும் கூறப்படுகிறது.

இதனையடுத்து, தேர்தல் தோல்வி எதிரொலியாக, பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் நவ்ஜோத் சிங் சித்து. தனது ராஜினாமா கடிதத்தை அவர், காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பி வைத்தார்.

இந்த சூழலில் தான், “காங்கிரஸ் தலைமை பதவிகளில் இருந்து சோனியா காந்தி குடும்பத்தினர் முற்றிலுமாக விலக வேண்டும்” என்று, அக்கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல் காட்டமாக தெரிவித்து உள்ளார்.

அத்துடன், “காங்கிரஸ் கட்சி அனைவருக்குமான கட்சியாக இருக்க வேண்டும் என தான் விரும்புவதாகவும், ஆனால் சிலர் அக்கட்சி ஒரு குடும்பத்திற்கானதாக இருக்க வேண்டும் என நினைப்பதாகவும்” கபில் சிபல் காட்டமாகவே தனது கருத்தை கூறி உள்ளார். 

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபலின் இந்த கருத்துக்கு, காங்கிரஸ் கட்சியின் பிற தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், “காங்கிரஸின் தலைமையிலிருந்து சோனியா காந்தி குடும்பத்தை அகற்றுவது மூலம் அக்கட்சியையும் இந்தியா என்ற சித்தாந்தத்தையும் அழித்துவிடலாம் என ஆர்எஸ்எஸ், பாஜக கருதுவதாகவும், இதையே கபில் சிபலின் கருத்து எதிரொலிப்பதாகவும்” அவர் குற்றம்சாட்டி உள்ளார்.

மேலும், “காங்கிரஸ் கட்சி பின்னடைவை சந்திக்கும் நேரங்களில் தலைவர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்” என்று, ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் கூறியுள்ளார்.