“நகரத்தை நோக்கி கிராம மக்கள் இடம் பெயர்வது படிப்படியாக தடைபடும்:” என்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரைத்து உள்ளார்.

“கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தை” சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடியே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

அப்போது உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “முத்தமிழறிஞர் கலைஞரின் எண்ணமாக இருக்கக்கூடிய  உழவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அவர்களின் நலனைப் பாதுகாத்திடவும், இந்தியாவில் முதன் முறையாக வேளாண்மைக்கு இலவச மின்சாரம் தந்து சாதனை படைத்தார்கள்” என்று, குறிப்பிட்டு உள்ளார்.  

“உழவர்களின் வருமானத்தைப் பெருக்குவதற்காக விளைபொருட்களை, பேருந்தில் இலவசமாக எடுத்துச் செல்லலாம் என்று அறிவித்தார்கள், அதை நடைமுறைப்படுத்திக் காட்டினார்கள். உழவர் சந்தைகளை ஏற்படுத்தித் தந்த உன்னதத் தலைவர்தான் நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர்” என்றும், பெருமிதத்தோடு கூறினார்.

தொடர்ந்து பேசிய முதல்வர், “தமிழகத்தின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்காக உழைத்தவர் கலைஞர் என்றும், கலைஞரின் அனைத்து கிராம வளர்ச்சித்திட்டம், தமிழகத்தில் உள்ள அனைத்து பஞ்சாயத்துகளிலும் செயல்படுத்தப்படும்” என்றும், அவர் சூளுரைத்தார். 

அத்துடன், “குறுவை சாகுபடிக்காக நாளை மேட்டூர் அணை திறக்கப்பட உள்ளது என்றும், விவசாயிகள் நலனுக்காக 7 தொலை நோக்கு திட்டங்களை உருவாக்கி உள்ளோம் என்றும், வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து விவசாயிகளை பெருமைப்படுத்தியது திமுக அரசு” என்றும், பெருமையோடு சுட்டிக்காட்டினார். 

மேலும், “விவசாயிகளின் நலனுக்காக எண்ணற்ற திட்டங்களை மாநில அரசு செயல்படுத்தி வருகிறது என்றும், உழவர்களின் நலன்களை எப்போது பாதுகாக்கும் அரசாக திமுக அரசு திகழ்கிறது” என்றும், அவர் தெரிவித்தார். 

அதே போல், “இரு போக சாகுபடி பரப்பை 20 லட்சம் ஹெக்டேராக உயர்த்த திட்டம், பயிர்களின் உற்பத்தித் திறனில் தேசிய அளவில் முதல் 3 இடங்களை அடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது என்றும், இதன் மூலம் 1,997 கிராமப் பஞ்சாயத்துகளில் 9 லட்சம் விவசாய குடும்பங்கள் பயன்பெறும்” என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரைத்தார்.

குறிப்பாக, “கிராம அளவில் தன்னிறைவு ஏற்படும், நகரத்தை நோக்கி கிராம மக்கள் இடம் பெயர்வது தடைபடும்” என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

முக்கியமாக, “கிராம வளர்ச்சி பெரும் மக்கள் இயக்கமாக மாற வேண்டும்” என்றும் குறிப்பிட்ட முதலமைச்சர், “கிராமத்தில் உள்ள அனைத்து உழவர்களையும் ஏதாவது ஒரு திட்டத்தின் கீழ் பயனடைய செய்ய வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார்.