தமிழ் திரை உலகின் குறிப்பிடப்படும் சிறந்த இயக்குனராகவும் நடிகராகவும் திகழும் பார்த்திபன் அவர்கள் தனக்கே உரித்தான பாணியில் தொடர்ந்து வித்தியாசமான திரைப்படங்களை வழங்கி ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். அந்த வகையில் ரசிகர்களின் சிந்தனைகளுக்கு அப்பாற்பட்டு உலக சாதனை முயற்சியாக பார்த்திபன் இயக்கி நடித்துள்ள திரைப்படம் இரவின் நிழல்.

பயாஸ்கோப் ஃபிலிம் ஃபார்மர்ஸ் சார்பில் இயக்குனர் பார்த்திபன் தயாரித்து இயக்கி நடித்துள்ள இரவின் நிழல் படத்தில் வரலக்ஷ்மி சரத்குமார், ரோபோ ஷங்கர், பிரிகிடா சகா, ஆனந்த கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஆர்தர்.A.வில்சன் ஒளிப்பதிவு செய்துள்ள இரவின் நிழல் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார்.

முன்னதாக கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட பார்த்திபனின் இரவின் நிழல் திரைப்படம் பலரது பாராட்டுக்களைப் பெற்றது. இதனையடுத்து வி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் கலைப்புலி.S.தாணு அவர்கள் வெளியிட வருகிற ஜூன் 24-ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் இரவின் நிழல் திரைப்படம் ரிலீஸாகவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக சினிமா வரலாற்றிலேயே முதல் முறையாக நான் லீனியர் சிங்கிள் ஷாட் ( NON LINEAR SINGLE SHOT MOVIE) திரைப்படமாக உருவாக்கப்பட்டு உலக சாதனை புத்தகங்களில் இடம் பெற்றுள்ள இரவின் நிழல் திரைப்படத்தின் மீது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் காத்திருக்கும் நிலையில், தற்போது இரவின் நிழல் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது. அந்த ட்ரைலர் இதோ…