“உக்ரைன் பெண்களை பாலியல் பலாத்காரத்தில் இருந்து காப்பாற்றுங்கள்” என்று கூறி, கேன்ஸ் திரைப்பட விழாவில் பெண் ஒருவர், ஆடைகள் இல்லாமல் நிர்வாணப் போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

ரஷ்யா -  உக்ரைன் போர் 3 மாதங்களை தொட உள்ளது. என்றாலும், ரஷ்யா ராணுவத்துக்கு எதிராக உக்ரைன் ராணுவமும் சளைக்காமல் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. இதனால், இந்த போர் முடிவுக்கு வராமல் தொடர்ந்து வருகிறது. 

அதாவது, உக்ரைன் போரில் அந்நாட்டின் பல்வேறு பகுதிகைளையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த ரஷ்ய போர் வீரர்கள் பலரும், உடலுறவுக்காக உக்கிரமான பல்வேறு விதங்களில் கடும் கொடூரங்களை நிகழ்த்தி வருவதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் எழுந்து வண்ணம் உள்ளன.

இப்படியாக, ரஷ்ய வீர்ரகளின் பாலியல் பலாத்கார அட்டகாசங்கள் உக்ரைன் நாட்டில் நாளுக்கு நாள் தொடர்ந்து உக்கிரமாகி வருவதாகவும் செய்திகள் தொடர்ந்து வெளியாகி வருக்கின்றன. 

இப்படியான குற்றச்சாட்டைத் தான், கடந்த மாதமும் உக்ரைன் நாட்டின் வெளியுறவு அமைச்சரும் கூறியிருந்தார். அதுவும், “உக்ரைனில் உள்ள ஏராளமான பெண்களை, ரஷ்ய வீரர்கள் பாலியல் பலாத்காரம் செய்வதாக” உக்ரைன் நாட்டின் வெளியுறவு அமைச்சர் பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

இதே குற்றச்சாட்டை உக்ரைன் நாட்டின் எதிர்க்கட்சியான ஹோலோஸ் கட்சியின் எம்.பி. லிசியா வெசிலின்கோவும் தொடர்ச்சியாக முன் வைத்து வந்தார். 

இது குறித்து அவர் பேசும் போது, “ரஷ்ய வீரர்கள் பலரும், 60 வயதுக்கு மேலான பெண்களை கூட விட்டு வைக்காமல் பாலியல் பலாத்காரம் செய்வதாகவும்” பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார். 

“ரஷ்ய வீரர்களின் உச்சக்கட்ட கொடூரம் தாங்க முடியாமல் பல பெண்களும் தற்கொலை செய்து கொண்டு உள்ளதாகவும்” அவர் கண்ணீர் மல்க கூறியிருந்தார்.

மேலும், “உக்ரைனில், ரஷ்ய வீரர்கள் பெண்கள், சிறுமிகள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுவதாக” ஐ.நா. மனித உரிமைகள் ஆணையமே கடந்த வாரத்தில் பெரும் கவலை தெரிவித்திருந்தது. 

இந்த சூழலில் தான், கேன்ஸ் திரைப்பட விழாவில் பிரான்ஸ் சமூக செயற்பாட்டாளர் நிர்வாணப் போராட்டம் நடத்தி, உக்ரைன் நாட்டு பெண்களுக்காக தற்போது உரக்க குரல் கொடுத்து உள்ளார்.

அதாவது, “உக்ரைன் நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்கார குற்றங்கள் முற்றிலுமாக தடுத்த நிறுத்தப்பட வேண்டும்” என்பதை  வலியுறுத்தி, கேன்ஸ் திரைப்பட விழாவில் உள்ள சிவப்புக் கம்பள வரவேற்புப் பகுதியில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் ஒருவர் மேலாடை இல்லாமல் நிர்வாணப் போராட்டத்தை நடத்தி உள்ளார்.

அதன் படி, அந்த பெண் போராளி, “தனது மார்பு, வயிற்றுப் பகுதியில் உக்ரைன் கொடி நிறப் பின்னணியில் 'எங்களை பலாத்காரம் செய்வதை தடுத்து நிறுத்துங்கள்' என்று எழுதியிருந்தார். 

முக்கியமாக, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அந்த பெண் போராளி, அந்த கேன்ஸ் பட விழாவில் அமைக்கப்பட்டிருந்த சிவப்புக் கம்பளப் பகுதியில் இருந்து, தனது ஆடைகளை அகற்றிவிட்டு, அங்கிருந்து ஓடி வந்திருக்கிறார். இதனையடுத்து, அங்கு இருந்த காவலர்களால் அந்த பெண் மடக்கப் பிடிக்கப்பட்டு, அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டிருக்கிறார். இந்த சம்பவம், அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், உலகம் முழுவதும் பெரும் வைரலாகி வருகிறது.