தமிழ் திரை உலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழ்பவர் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன். இவரது இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன்.TR நடித்த வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்து இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

முன்னதாக மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் பயோபிக் வெப்சீரிஸாக ரேஷ்மா கட்டலா கதை-திரைக்கதையில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளிவந்த குயின் வெப்சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது. இதில் ஜெயலலிதா அவர்களின் கதாபாத்திரத்தில் நடிகை ரம்யாகிருஷ்ணன் சிறப்பாக நடித்திருந்தார்.

மேலும் ஜெயலலிதா அவர்களின் இளவயது கதாபாத்திரங்களில் அணிகா சுரேந்தரன் மற்றும் அஞ்சனா ஜெயப்பிரகாஷ் ஆகியோர் நடிக்க, இந்திரஜித் சுகுமாரன், வம்சி கிருஷ்ணா, துளசி, சோனியா அகர்வால் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். S.R.கதிர் ஒளிப்பதிவில் தர்புகா சிவா இசையமைத்திருந்தார்.

கடந்த சில மாதங்களாக குயின் வெப் சீரிஸின் பார்ட் 2 படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியானது. நடிகை ரம்யாகிருஷ்ணன் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ஆமாம்...ஆமாம்...ஆமாம்... என குறிப்பிட்டு இதனை தெரிவித்துள்ளார். வைரலாகும் ரம்யா கிருஷ்ணனின் குயின் 2 ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் இதோ…