பள்ளி மாணவிகளின் பாலியல் குற்றச்சாட்டில் சுஷில் ஹரி சர்வதேச பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா, விசாரணைக்குக் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் இன்று ஆஜராகவில்லை என்ற செய்தி டிரெண்டாகிக்கொண்டு இருக்கிறது.

தமிழ்நாட்டில் புகழ்பெற்றுத் திகழும் பல பள்ளிக்கூடங்கள் தொடர்ச்சியாக பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் தொடர்ந்து சிக்கி வருகின்றன. இப்படி, பள்ளிக்கூடங்கள் மீது எழும் பாலியல் குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்து 2 நாட்கள் பெரிய அளவில் பேசப்படுவதும், அதன் பிறகு அந்த வழக்கு பற்றிய எந்த தகவலும் வெளியாகாமல் மறைந்து போவதுமாக இருந்து வருகின்றன.

இந்த நிலையில் தான், பிஞ்சுப் பிள்ளைகளைப் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கியதாக, போலி ஆன்மீகவாதி சிவசங்கர் பாபா மீது கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து பாலியல் குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டு வந்தன.

பள்ளியில் படிக்கும் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாகப் போலி ஆன்மீகவாதி சிவசங்கர் பாபா மீது குற்றச்சாட்டப்படும் ஆடியோ மற்றும் தொலைப்பேசி உரையாடல்கள் இணையத்தில் கடந்த சில நாட்களாக வெளியாகி, பெற்றோர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. 

அதாவது, செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி சர்வதேச பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா, ஆன்மீகவாதி என்ற போர்வையில் மாணவிகளைப் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கியது, குறித்து சமூக வலைத்தளங்களில் அந்தப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகள் பரபரப்பு குற்றச்சாட்டுகளைத் தொடர்ச்சியாக முன் வைத்துவருகின்றனர்.

இதனையடுத்து, “போலி ஆன்மீகவாதி சிவசங்கர் பாபா மீதும், சுஷில் ஹரி சர்வதேசப் பள்ளி மீதும் நடவடிக்கை எடுக்கத் தமிழ்நாடு அரசு தயங்குவது ஏன்?” என்றும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.

இந்த நிலையில், இந்த புகார்கள் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

அத்துடன், முன்னாள் மாணவிகள் தெரிவித்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் விசாரிக்கத் தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சுஷில் ஹரி பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபாவுக்கு சம்மன் அனுப்பி வைத்திருந்தனர். 

அதே போல், அந்த பள்ளியின் தாளாளர் வெங்கட்ராமன், நிறுவனர் சிவசங்கர் பாபா, அவரது வழக்கறிஞர், அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆகிய 3 ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கும் சம்மன் அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், பள்ளியின் தாளாளர் வெங்கட்ராமன், 3 ஆசிரியர்கள் என 4 பேர் மட்டுமே இன்று விசாரணைக்காக நேரில் ஆஜராகி இருந்தனர். 

ஆனால், குற்றச்சாட்டுக்கு ஆளான முக்கிய முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் சிவசங்கர் பாபா, இன்றைய தினம் விசாரணைக்கு ஆஜராகவில்லை. 

அவரது தரப்பு வழக்கறிஞர் நாகராஜன் என்பவர் மட்டுமே ஆஜராகியிருக்கிறார். இந்தப் புகார் தொடர்பாக குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் சரஸ்வதி நேரடியாக விசாரணை நடத்தினார். அப்போது, ஆஜரானவர்களுடைய வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

இதனிடையே, குற்றச்சாட்டுக்கு ஆளான சிவசங்கர் பாபா, நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக, அவரது தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.