சாராய வியாபாரிகள் வீட்டில் அத்துமீறி நுழைந்த போலீசார் 3 பேர், அவரது வீட்டில் இருந்த நகைகள் மற்றும் பணத்தைத் திருடிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், திருட்டில் ஈடுபட்ட 3 போலீசாரும் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர்.

கொரோனா 2 வது அலை காரணமாக, தமிழ்நாட்டில் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால், டாஸ்மாக் கடைகள் உள்ளிட்ட பல அடைகள் மூடப்பட்டு உள்ளன. இதனால், மது பழக்கம் உள்ளவர்கள், மது அருந்த முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இப்படியான நிலையில், ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால், தமிழகத்தின் சில பகுதிகளில் கள்ளச்சாராய விற்பனை நடைபெற்று வருவதாகவும் தொடர்ந்து செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன.

இதனையடுத்து, சாராயம் தயாரிப்பது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கிடைக்கும் இடங்களில் போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 
இந்த நிலையில் தான், வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஊசூர் அடுத்து உள்ள குருமலையில் இருக்கும் நச்சுமேடு மலை கிராமத்தில், சிலர் சட்ட விரோதமாகச் சாராயம் காய்ச்சுவதாக போலீசாருக்கு ரகசிய தகவில் கிடைத்து உள்ளது. 

இந்த தகவலின் பேரில், அரியூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அன்பழகன் தலைமையிலான 4 போலீசார், அங்குள்ள ”நச்சுமேடு பகுதியில் சாராயம் காய்ச்சப்படுகிறதா?” என்று, தீவிர சோதனையில் ஈடுபட்டனர். 

அதன் படி, சாராயம் காய்ச்சுவதாக கிடைத்த தகவலின் படி, அந்த பகுதியைச் சேர்ந்த இளங்கோ மற்றும் செல்வம் ஆகியோரின் வீடுகளில் அத்துமீறி நுழைந்த போலீசார், அந்த வீட்டில் இருந்த சுமார் ஆயிரம் லிட்டர் சாராய ஊரல், 8 மூட்டை வெல்லம், 50 லிட்டர் சாராயம் மற்றும் சாராயம் காய்ச்ச தேவையான மூலப்பொருட்களையும் மீட்டு, அவற்றை அழித்ததாகவும் கூறப்படுகிறது.

அதன் பிறகு, சோதனையின் போது அந்த வீட்டில் சம்மந்தப்பட்ட செல்வம் மற்றும் இளங்கோ ஆகிய இருவரும் இல்லாத நிலையில், போலீசார் அங்கிருந்து சென்று உள்ளனர்.

குறிப்பாக, சாராய வேட்டையில் ஈடுபட்ட போலீசார், செல்வம் மற்றும் இளங்கோ ஆகியோரின் வீட்டில் நுழைந்து பீரோவை உடைத்து அதிலிருந்த சுமார் 8.5 லட்சம் பணம் மற்றும் 15 சவரன் தங்க நகைகளை அபகரித்துக்கொண்டு அந்த வீடு அமைந்துள்ள மலையை விட்டு கீழே இறங்கிக் கொண்டிருப்பதாகக் கூறி, அந்த கிராமம் முழுவதும் தகவல் பரவியது. இதனையடுத்து, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், தனது கிராம மக்களைத் திரட்டிக்கொண்டு, மலையில் இருந்து கீழே இறங்கிக்கொண்டிருந்த போலீசாரை வழி மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

ஆனால், அதற்குள் இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் ஆய்வாளர் சுபா, போலீசார் வீட்டில் இருந்து அபகரித்து வந்ததாக கூறப்படும் நகைகள் மற்றும் பணத்தை மீட்டு, செல்வம் மற்றும் இளங்கோ குடும்பத்தாரிடம் ஒப்படைத்தனர். 

அத்துடன், சாராய சோதனைக்குச் சென்ற இடத்தில் வீட்டில் இருந்த பணம் மற்றும் நகைகளை போலீசார் அபகரித்துச் சென்றதாக பொது மக்கள் அங்குள்ள காவல் உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். 

இது தொடர்பாக ஏ.எஸ்.பி தலைமையில் வேலூர் காவல் உதவி ஆய்வாளர் ஆல்பர்ட் ஜான் விசாரணை மேற்கொண்டார். இந்த விசாரணைக்குப் பிறகு, அரியூர் உதவி ஆய்வாளர் அன்பழகன், காவலர்கள் யுவராஜ், இளையராஜா உள்ளிட்ட 3 பேர் மீது, வீட்டை உடைத்து திருடுதல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் அரியூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், சாராய வியாபாரிகள் வீட்டில் அத்து மீறி நுழைந்து நகைகள் மற்றும் பணத்தைத் திருடிய 3 போலீசாரும் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர். 3 பேரையும் சஸ்பெண்ட் செய்து, எஸ்.பி செல்வ குமார் தெரிவித்து உள்ளார்.