விஜய் தொலைக்காட்சியின் முன்னணி மெகா தொடர்களில் நடிகராகவும், தொகுப்பாளராகவும் வலம்வந்த கவின், முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடம் பிடித்தார். வெள்ளித்திரையிலும் சத்ரியன் மற்றும் நட்புனா என்னனு தெரியுமா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

முன்னதாக EKAA என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் இயக்குனர் வினித் வரபிரசாத் இயக்கத்தில் ஹாரர் த்ரில்லர் திரைப்படமாக வெளிவந்த லிப்ட் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். இத்திரைப்படம் நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

நடிகராக மட்டுமல்லாமல் உதவி இயக்குனராகவும் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் உடன் இணைந்து டாக்டர் மற்றும் பீஸ்ட் உள்ளிட்ட திரைப்படங்களில் பணியாற்றி வருகிறார். இதனையடுத்து இயக்குனர் ஈனாக் ஏபில் இயக்கத்தில் கவின் நடிக்கும் புதிய வெப்சீரிஸான ஆகாஷ் வாணி வெப் சீரிஸின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.

அழகிய ரொமாண்டிக் வெப் சீரிஸாக வெளிவர இருக்கும் ஆகாஷ்வாணியில் கவினுக்கு ஜோடியாக நடிகை ரெபா மோனிகா ஜான் நடிக்க, சரத் ரவி, தீபக் பரமேஷ், அபிதா வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் தற்போது இந்த வெப்சீரிஸில் தனது டப்பிங் பணிகளை கவின் நிறைவு செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். எனவே தொடர்ந்து ஆகாஷ் வாணி வெப்சீரிஸ் குறித்த அடுத்தடுத்து அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
bigg boss kavin completed his part dubbing for aakashvaani web series