“எம்.ஜி.ஆருடன் பயணித்து, அவருக்கு நான் அரசியல் ஆலோசனை” வழங்கியுள்ளதாக சசிகலா தொண்டர்களுடன் பேசிய ஆடியோ, வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சசிகலாவின் அரசியல் ரீ என்ட்ரி கிட்டதட்ட தற்போது உறுதியாகி உள்ளது.

தமிழக சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன்பாக சிறையில் இருந்து வெளியான சசிகலா, அதிமுகவுடன் இணைந்து செயல்பட விரும்பியதாகத் தகவல்கள் தொடர்ந்து வெளியானது. ஆனால், அதிமுகவில் உள்ள உயர் கட்ட தலைவர்கள் அதனை முற்றிலுமாக தவிர்த்து வந்தனர். இது தொடர்பாக திரைமறைவில் ரகசியமாகப் பேச்சு வார்த்தை கடத்தப்பட்டது என்றும், ஆனால் அது அப்படியே தோல்வியில் முடிவடைந்தது என்றும் தகவல்கள் வெளியானது. 

இதனையடுத்து, “நான் தீவிர அரசியலிலிருந்து ஒதுங்கியிருக்கப் போவதாக” வெளிப்படையாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார் சசிகலா. 

ஆனாலும், அவர் தமிழக அரசியல் நிகழ்வுகளை வீட்டில் இருந்தபடியே மிகவும் உன்னிப்பாகக் கவனித்து வந்தார். 

அத்துடன், தமிழக சட்டமன்ற தேர்தல் முடியும் வரை அமைதி காத்து வந்த சசிகலா, தற்போது அதிமுக தொண்டர்களிடம் தொடர்ந்து பேசி வருகிறார். இதனால், “சசிகலாவின் அரசியலில் ரீ என்ட்ரி கொடுப்பாரா? என்ற கேள்வியும் எழுந்தது.

மேலும், தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக அதிமுக தொண்டர்களுடன் சசிகலா பேசிவரும் ஆடியோ உரையாடல்கள் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

இது வரை அதிமுக தொண்டர்களுடன் சசிகலா பேசும் 100 க்கும் மேற்பட்ட ஆடியோக்கள் தற்போது வரை வெளிவந்து உள்ளதாகக் கூறப்படுகிறது. 

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அதிமுக தலைமை, அக்கட்சியின் மாவட்ட தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி, சசிகலாவுக்கு எதிராகத் தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் தீர்மானங்களை நிறைவேற்றி வந்தனர். 

அதே நேரத்தில், சசிகலாவுடன் செல்போனில் பேசிய வரும் பலரும், உடனுக்குடன் அதிமுகவிலிருந்து அடுத்தடுத்து தொடர்ச்சியாக நீக்கப்பட்டு வருகின்றனர். 

இந்த நிலையில் தான், சசிகலாவின் அரசியலில் ரீ என்ட்ரி கிட்டதட்ட உறுதியாகி உள்ளது.

அதாவது, தற்போது சசிகலா தரப்பில் புதிய ஆடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

அந்த ஆடியோவில் தொண்டர் ஒருவரிடம் பேசும் சசிகலா, “நான், ஜெயலலிதாவுடன் மட்டுமல்ல, எம்ஜிஆரோடும் சேர்ந்து பயணித்திருக்கிறேன் என்றும், இது நிறைய பேருக்குத் தெரியாத ஒரு விசயம்” என்றும், அவர் குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார். 

முக்கியமாக, “எம்ஜிஆரோடும் பேசி பழகியதால், நான் நிதானமாகப் பேசக் கற்று கொண்டேன் என்றும், கட்சி விஷயமா நிறையக் கருத்துகளை என்னிடம் அவர் 
கேட்டிருக்கிறார் என்றும், நேற்று கூட எம்ஜிஆர் வீட்டில் இருந்து வந்து என்னை பார்த்து விட்டு சென்றனர்” என்றும், அவர் கூறினார். 

குறிப்பாக, “தொண்டர்களை இவர்கள் காப்பாற்றப் போவது இல்லை என்றும், இதனால், வரும் 5 ஆம் தேதிக்கு பிறகு தொண்டர்களைச் சந்திப்பேன்” என்றும், திட்டவட்டமாகத் தெரிவித்து உள்ளார். 

அதே போல், பேசியுள்ள மற்றொரு ஆடியோவில், “கட்சி நம்முடையது என்றும், தொண்டர்களால் ஆனது தான் இயக்கம் என்றும், விரைவில் அனைத்து ஊருக்கும் சுற்றுப் பயணம் செல்ல இருப்பதாகவும், அப்போது அனைத்து தொண்டர்களையும் சென்று சந்திப்பேன்” என்றும், அவர் உறுதிப்படத் தெரிவித்தார். இதனால், சசிகலாவின் அரசியல் ரீ என்ட்ரி விரைவில் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.