மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறக்கோரி நாடு முழுவதும் விவசாய சங்கங்கள் சார்பில் பாரத் பந்த் நடைபெற்று வருவதால், டெல்லியின் எல்லைப் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

பாஜக தலைமையிலான மத்திய அரசு புதிதாகக் கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் விவசாயிகள், தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி தொடங்கிய இந்திய விவசாயிகளின் போராட்டம் கிட்டதட்ட 300 நாட்களைக் கடந்து தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

மத்திய அரசுடன் இது வரை பல கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றும், தோல்வியில் முடிந்துபோனதால், விவசாயிகளின் போராட்டத்திற்கு மத்திய அரசு துளியும் இறங்கி வரவில்லை என்று மிக கடுமையாக நாடு முழுவதும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

எனினும், “தங்களது கோரிக்கைகளை ஏற்கும் வரை போராட்டம் தொடரும்” என்றும், விவசாயச் சங்கங்கள் உறுதியாக நிற்கின்றன.

இந்த நிலையில் தான், “மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து” இன்று நாடு தழுவிய அளவில் முழு அடைப்பான பாரத் பந்த் போராட்டத்திற்கு விவசாய சங்கங்கள் ஏற்கனவே அழைப்பு விடுத்திருந்தன. 

சம்யுக்தா கிசான் மோர்ச்சா விவசாய சங்கம் அழைப்பு விடுத்துள்ள இந்த நாடு தழுவிய போராட்டத்துக்கு நாடு முழுவதும் உள்ள பல்வேறு கட்சிகள், அமைப்புகள் மற்றும் சங்கங்கள் யாவும் ஆதரவு தெரிவித்தன. 

இந்த நிலையில், திட்மிட்டபடி “நாடு தழுவிய வேலை நிறுத்தம் போராட்டமானது இன்று காலை 6 மணி முதல் இந்தியா முழுவதும் தொடங்கி உள்ளது. 

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு ஆதரவாக டெல்லி, அரியானா, பஞ்சாப், ஜார்க்கண்ட், ஆந்திரா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் அரசுகள் விவசாயிகளின் பாரத் பந்த் போராட்டத்திற்கு ஆதரவு அளித்து போராட்டத்தில் குதித்து உள்ளன. 

இதனால், நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் ஆங்காங்கே விவசாயிகள் மறியல் போராட்டம் நடத்தி வருகிறார்கள். 

குறிப்பாக, டெல்லியில் சாலை மற்றும் ரெயில் போக்குவரத்தை முடக்கிய விவசாயிகள், தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

அதன் படி, டெல்லி - மீரட் சாலையில் விவசாயிகள் மறியலில் ஈடுபட்டு வருவதால், அந்த பகுதியில் வாகன போக்குவரத்தானது முற்றிலுமாக ஸ்தம்பித்துப் போய் உள்ளது. விவசாயிகள், டெல்லிக்கு செல்லும் அனைத்து வழிகளையும் மறித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

டெல்லியில் ஜந்தர் மந்தரில்  காலை 11 மணிக்கு மாபெரும் பேரணியையும் விவசாயிகள் நடத்துகிறார்கள். விவசாயிகளின் போராட்டம் காரணமாக டெல்லியின் எல்லைப்பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

முக்கியமாக, தமிழகத்தின் பல இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் பல இடங்களில் ரயில் மறியல் போராட்டமும் நடைபெற்று வருகிறது.

திருவண்ணாமலை ஆரணி அடுத்த களம்பூரில் விழுப்புரம் - திருப்பதி ரயிலை வழி மறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். 

தஞ்சையில் கும்பகோணம் ரயில் நிலையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ரயில் மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அதே போல், முழு அடைப்பு போராட்டத்தையொட்டி புதுச்சேரியில் தனியார் பேருந்துகள் இயங்கவில்லை. குறைந்த அளவிலான புதுச்சேரி அரசு பேருந்துகள், மற்றும் ஆட்டோ, இயக்கப்பட்டு வருகின்றன. இதனால், பொது மக்களின் இயல்பு வாழ்க்கை அங்கு பாதிக்கப்பட்டு உள்ளது. இதே நிலை, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக, விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு தழுவிய பாரத் பந்த் காரணமாக, ஆந்திராவில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. அத்துடன், ஆந்திராவில் பேருந்துகள் நிறுத்தப்பட்டு உள்ளது. நள்ளிரவு 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை அரசு பேருந்துகள் இயங்காது என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.