இந்தியத் திரையுலகின் இன்றியமையாத நடன இயக்குனராகவும் மெகா ஹிட் திரைப்படங்களை கொடுக்கும் மாஸ் இயக்குனராகவும் தன் நடிப்பாலும் நடனத்தாலும் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் சிறந்த நடிகராகவும் பன்முகத்தன்மை கொண்ட திரை கலைஞராகவும் வலம் வருபவர் பிரபுதேவா. அடுத்தடுத்து வரிசையாக  பிரபுதேவாவின் திரைப்படங்கள் ரசிகர்களை மகிழ்விக்க காத்திருக்கின்றன.

முன்னதாக நடிகர் பிரபுதேவா காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் பொன்மாணிக்கவேல், பிரபுதேவா-லட்சுமி மேனன் இணைந்து நடித்த யங் மங் சங் மற்றும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் பிரபுதேவா நடித்துள்ள பஹீரா உள்ளிட்ட திரைப்படங்கள் நிறைவடைந்துள்ளன.

மேலும் இருட்டுஅறையில்முரட்டுகுத்து படத்தை இயக்கிய இயக்குனர் சந்தோஷ்.பி.ஜெயக்குமார் இயக்கத்தில் பிரபுதேவா நடித்துள்ள பொய்க்கால் குதிரை திரைப்படமும் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் வெளியான பொய்க்கால்குதிரை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. அதனைத் தொடர்ந்து தனது புதிய திரைப்படத்தை இன்று பூஜையுடன் தொடங்கினார் பிரபுதேவா.

ஜாய் பிலிம் பாக்ஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் திரைப்படமாக தயாராகும் புதிய திரைப்படத்தில் பிரபுதேவா கதாநாயகனாக நடிக்க அறிமுக இயக்குனர் சாம் ரோட்ரிகஸ் எழுதி இயக்குகிறார். பிரசாத்.எஸ்.என். இசையமைக்க முன்னணி படத்தொகுப்பாளர்  ஆண்டனி படத்தொகுப்பு செய்கிறார். இந்த புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையோடு தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தொடர்ந்து இப்படம் குறித்த இதர அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.