“ரஜினி ஆரம்பிக்கும் கட்சிக்கு இப்போது நேரம் சரி இல்லை” என்று, மறைந்த காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமாரின் மகன் நடிகர் விஜய் வசந்த் தெரிவித்துள்ளார்.

“சென்னை 28”, ”நாடோடிகள்”, “என்னமோ நடக்குது”, “சென்னை 28 பார்ட் 2”, “அச்சமின்றி”, “வேலைக்காரன்” உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ் பெற்றவர் காங்கிரஸ் எம்.பி. எச்.வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த். தற்போது, அவர் “மை டியர் லிசா” என்ற படத்தில் நடித்து வருகிறார். 

காங்கிரஸ் எம்.பி.யாக இருந்த வசந்தகுமார் மறைவைத் தொடர்ந்து, கன்னியாகுமாரி நாடாளுமன்றத் தொகுதி காளியாகியுள்ளது. 

இதனால், கன்னியாகுமரி தொகுதியில் எச்.வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் போட்டியிட வேண்டும் என்ற குரல்கள் கடந்த சில மாதங்களாக எழத் தொடங்கி உள்ளன.

குறிப்பாக, வசந்த அன் கோ உரிமையாளர் வசந்தகுமார் அண்ணாச்சியின் மறைவைத் தொடர்ந்து, “அவர் இருந்த இடத்திற்கு நீங்கள் வரணும்” என்று, நடிகர் விஜய் வசந்தை அவரது அபிமானிகள் அரசியலுக்கு இழுப்பதாகத் தகவல்கள் வெளியாகிக்கொண்டு இருந்தது, இதனால், மறைந்த வசந்தகுமாரின் 7 ஆம் நாளை அனுசரிக்கும் வகையில் கன்னியாகுமரியில் மவுன ஊர்வலம் நடைபெற்றது. அப்போது அதில் விஜய் வசந்த் கலந்து கொண்டார். மவுன ஊர்வலத்தின் இறுதியில் தேர்தலில் போட்டி குறித்த கேள்விக்குப் பதிலளிக்கும் விதமாக விஜய் வசந்த் பேசியிருந்தார். 

அதன் படி, “என்னுடைய தரப்பிலிருந்து எந்தவொரு முடிவுமே இது வரை எடுக்கவில்லை. கட்சியிலிருந்து அப்பாவுக்குக் கொடுத்த பொறுப்பை அவர் சிறப்பாகச் செய்தார். கட்சி என்ன முடிவெடுக்கிறதோ, அதன் படிதான் செயல்படுவோம். தேர்தலில் நிற்பது தொடர்பாக எந்தவொரு முடிவும் எடுக்கவில்லை. குடும்பத்துடன்  ஆலோசித்துவிட்டுச் சொல்கிறேன்” என்று, அவர் கூறியிருந்தார். 

முக்கியமாக, “அரசியலில் விருப்பம் இருப்பதாக கூறி உள்ள விஜய் வசந்த், தற்போதைக்கு போட்டியிட விரும்பவில்லை” என கூறியிருந்தார். 

அத்துடன், “நான் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று, அப்பாவின் நண்பர்கள் கேட்டுக்கொண்டனர். ஆனால், காங்கிரஸ் உறுப்பினரான நான் கட்சி தலைமை என்ன சொல்கிறதோ அதன் படியே செய்வேன்” என்றும், விஜய் வசந்த் கூறியிருந்தார். 

அதே நேரத்தில் தற்போதைய காங்கிரஸ் கட்சியின் அரசியல் நிலவரப்படி ரூபி மனோகரன் அல்லது நடிகர் விஜய் வசந்த் ஆகிய இருவரில் ஒருவருக்கு தான், கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி சீட் வழங்கும் என்று, அக்கட்சியில் சிலர் கிசுகிசுக்கத் தொடங்கினார்கள்.

இதனால், நடிகர் விஜய் வசந்திற்கு அரசியல் ஆர்வம் வந்துவிட்டது என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது. ஆனாலும், அவர் அரசியல் தொடர்பாக எந்த கருத்தையும் தெரிவிக்காமல் அமைதி காத்து வந்தார்.

ஆனால், இன்றைய தினம் செய்தியாளர்களைச் சந்திப்பின் போது, நடிகர் ரஜினியின் அரசியல் வருகை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்துப் பேசிய நடிகர் விஜய் வசந்த், “ரஜினி, கமல் வரும் போது அவர்களைப் பார்க்க வேண்டும் என்று தான் கூட்டம் கூடுமே தவிர, அது ஓட்டாக மாறாது” என்று, தெரிவித்தார்.

மேலும், “ரஜினி ஆரம்பிக்கும் கட்சிக்கு இப்போது நேரம் சரி இல்லை” என்றும், நடிகர் விஜய் வசந்த் வெளிப்படையாகவே பேசி உள்ளார். நடிகர் விஜய் வசந்தின் இந்த கருத்து, தற்போது வைரலாகி வருகிறது. இது சினிமா வட்டத்தில் மட்டுமின்றி, அரசியல் வட்டாரத்தில் கவனிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, “சில அரசியல் கட்சி தலைவர்களுக்கு எதிராக ரஜினிகாந்த் மாணிக் பாட்ஷாவாக வெகுண்டெழுவார்” என்று, கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார்.