மலையாள திரையுலகில் பிரபலமான நடிகர் அனில் நெடுமங்காடு அணையில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சூப்பர் ஹிட் படமான அய்யப்பனும் கோஷியும் படத்தில் சதீஷ்குமார் என்ற போலீஸ் அதிகாரி கேரக்டரில் நடித்திருந்தார். கமாட்டிபாடம், பாவாட, நான் ஸ்டீவ் லோபஸ் உட்பட படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களை கவர்ந்தார் அனில் நெடுமங்காடு. கடைசியாக பாபம் செய்யாதவர் கல்லெறியட்டே என்ற படத்தில் நடித்திருந்தார். 

இவர், இப்போது பீஸ் என்ற படத்தில் நடித்து வந்தார். இதில் ஜோஜு ஜார்ஜ் ஹீரோவாக நடிக்கிறார். இதன் ஷூட்டிங் தொடுபுழாவில் நடந்து வருகிறது. இதற்காக அங்கு சென்ற அனில், அங்குள்ள மலங்காரா அணையில் நண்பர்களுடன் நேற்று மாலை குளிக்கச் சென்றார். அப்போது அவர் ஆழமான பகுதிக்குச் சென்று குளித்துக் கொண்டிருந்தபோது, திடீரென நீரில் மூழ்கினார். 

அவரைக் காணாததால், அதிர்ச்சி அடைந்த அவர் நண்பர்கள், தேடினர். சிறிது நேரத்தில் அவர் உடல் மீட்கப்பட்டது. பின்னர் அருகில் இருந்த மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அங்கு அவர் உயிரிழந்ததை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். மறைந்த அனில் நெடுமங்காடுக்கு வயது 48. படப்பிடிப்புக்காக சென்ற நடிகர் ஒருவர், அணையில் மூழ்கி உயிரிழந்தது மலையாள திரை வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து மலையாள திரைத்துறையினர், அவர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதை உறுதி செய்துள்ள நடிகர் பிருத்விராஜ், இல்லை...சொல்வதற்கு எதுவுமில்லை. உங்கள் ஆத்மா சாந்தியடைட்டும், அனிலேட்டா என்று இரங்கலில் தெரிவித்துள்ளார். பிருத்விராஜ் சகோதரரும் நடிகருமான இந்திரஜித் கூறும்போது, இதைக் கேட்டதும் நொறுங்கி விட்டேன். இரண்டு நாட்களுக்கு முன் தான் அவருடன் நடித்தேன். அதற்குள் இப்படியொரு செய்தியை என்னால் நம்பவே முடியவில்லை என்று தெரிவித்துள்ளார். அவருடன் நடித்த துல்கர் சல்மான் உட்பட பலர் அனிலின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த 2020 ஆண்டில் சினிமா துறை சார்ந்த பல திறமையானவர்கள் உயிரிழந்துள்ளனர். கடந்த ஜூன் மாதம் பிரபல மலையாள இயக்குனர் சச்சி மரணமடைந்தார். சில நாட்களுக்கு முன் சூஃபியும் சுஜாதாயும் இயக்குனர் ஷாநவாஸ் உயிரிழந்தார். இப்போது, அனில் நெடுமங்காடும் உயிரிழந்திருப்பது கேரள திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.