சென்னையில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் மறைந்த பண்பாட்டு ஆய்வாளர் தொ. பரமசிவனுக்கு அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர் சந்திப்பில் , விஜய் குறித்து நீங்கள் தெரிவித்த கருத்துக்கு விஜய் ரசிகர்கள் கோபமாக இருக்கிறார்களே? ‘என்ற கேள்விக்கு பதிலளித்த சீமான்.


“ அவர்கள் கோபமாக இருந்தால் எனக்கு என்ன ஆகிவிடும்? அவர்களும் என் தம்பிகள் தான். அவர்கள் இன்னும் அரசியல்படுத்தப்படவில்லை. ஒரு நடிகர் என்பதாலேயே நாட்டை ஆள தகுதி எப்படி வரும்? அதை நாங்கள் ஏற்கவில்லை. காமராஜர், கக்கன், ஜீவா போன்ற தலைவர்கள் இருக்கிறார்கள். நல்லக்கண்ணு அய்யா வாழ்ந்துகொண்டிருக்கிறார். இவர்களை விட்டுவிட்டு, எம்ஜிஆர் வரணும், ரஜினி வரணும்னா வெறுப்பாகுமா, ஆகாதா?


தொடங்க காலத்தில் தம்பி விஜயை நான் எந்த அளவுக்கு தற்காத்து நின்றேன் என அனைவருக்கும் தெரியும். அவர் புகழ் வெளிச்சத்தில் மற்றவர்களுக்காக நிற்க வேண்டும். அவர் அரசியலுக்கு வரட்டும். வரவேண்டாம் என்று சொல்லவில்லை. வந்து அரசியல் செய்யுங்கள். களத்தில் நின்று மக்களுக்காகப் போராடி, நன்மதிப்பைப் பெற்று வரட்டும். குறைந்தபட்சம் சூர்யா அளவுக்காகவது அவர் குரல் கொடுக்க வேண்டும். திரைக்கவர்ச்சியை வைத்து நாட்டை ஆள வேண்டும் என்ற எண்ணத்தை தான் கைவிட வேண்டும் என்கிறேன்.


உள்ளாட்சி தேர்தலில்  எளிய மக்கள் வாக்குச் செலுத்தியிருக்கிறார்கள். உள்ளாட்சித் தேர்தலில் 100க்கும் மேற்பட்ட ஊராட்சித் தலைவர்களை வென்றிருக்கிறோம். நான் இந்த வேலையைச் செய்வதில் மன நிறைவு அடைகிறேன். என்னை அங்கீகரிக்காமல் போனால், அதில் என்ன இருக்கிறது? நான் பிறந்த கடனைச் செய்துவிட்டேன். ” என்று தெரிவித்தார்.