ஆம்புலன்ஸில் இருந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்த சிதறியதால், 108 ஆம்புலன்ஸ் வாகனம் அப்படியே தீ பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோயம்புத்தூரில் தான் இப்படி ஒரு பரபரப்பு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கோவை மாவட்டம், இஎஸ்ஐ அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர், அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், திடீரென்று அவருக்கு உடல் நிலை மேலும் மோசம் அடைந்தது.

இதன் காரணமாக, அந்த மருத்துவமனையில் இருந்த 108 ஆம்புலன்ஸில் ஆக்ஸிஜன் உதவியுடன் உயர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

கோவை அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் வந்ததும், ஆம்புலன்சில் இருந்த நோயாளியை கொரோனா சிகிச்சை பிரிவுக்கு அங்கிருந்து செவிலியர்கள் அழைத்துச் சென்று உள்ளனர். 

அந்த நேரத்தில், ஆம்புலன்சில் இருந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் திடீரென்று வெடித்து சிதறி உள்ளது. இதனால், 108 ஆம்புலன்ஸ் வாகனம் அப்படியே தீப்பற்றி எரிந்து உள்ளது. இதில், தீ மளமளவென ஆம்புலன்ஸ் முழுவதும் பரவத் தொடங்கி, கொழுந்துவிட்டு எரிந்து உள்ளது. இதனால், அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாகக் காட்சியளித்தது. 

இதனைப் பார்த்த அங்கிருந்தவர்கள், ஓடி வந்து தீயை அணைக்க முயன்றனர். அத்துடன், அங்கிருந்தவர்கள் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். 108 ஆம்புலன்ஸ் வாகனம் தீப்பற்றி எரிந்ததால், அந்த பகுதியில் இருந்தவர்கள் மற்றும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகள் பலரும் அச்சமும், பீதியும் அடைந்தனர்.

மேலும், தீ விபத்து ஏற்படும் போது, அந்த வாகனத்திலும், ஆம்புலன்ஸ் அருகிலும் யாரும் இல்லாததால் நல்ல விதமாக அங்கு உயிர் சேதம் முற்றிலுமாக தவிர்க்கப்பட்டது. யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

இதனையடுத்து, சம்ப இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் ஆம்புலன்ஸ் மீது தண்ணீரை அடித்து, சுமார் அரை மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

அத்துடன், இது குறித்த விசாரணை மேற்கொண்ட போலீசார், “ஆக்ஸிஜன் சிலிண்டரில் ஏற்பட்ட கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கக்கூடும்” என்று, முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாகத் தெரிவித்தனர். ஆனாலும், இந்த தீ விபத்து குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தீ விபத்தால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பும், பீதியும் ஏற்பட்டது.