“காவிரி பிரச்சனை மகன், பேரன், கொள்ளுப்பேரன் வரை போகுமோ? என்ற சந்தேகம் நிலவுகிறது” என்று, தமிழக சட்டப் பேரவையில் அமைச்சர் துரைமுருகன், தனது வேதனையை பதிவு செய்து உள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இந்த  பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியதும் முதல் நிகல்வாக மறைந்த முன்னாள் எம்எல்ஏக்களுக்கு சட்டப் பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியதும், உறுப்பினர்களின் கேள்விகளுக்கு முதலமைச்சர், சக அமைச்சர்கள் என்று ஒவ்வொருவராக பதில் அளித்து வருகின்றனர்.

அப்போது, மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு சட்டப் பேரவையில் தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. 

அதன் படி, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தமிழக சட்டப் பேரவையில் தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார். 

அப்போது பேசிய அமைச்சர் துரைமுருகன், “மேகதாது விவகாரத்தில் தோற்றுப் போனால் எதிர்கால சமுதாயம் நம்மை சபிக்கும்” என்று, எடுத்ததுமே எகிர அடித்து பேசினார் அமைச்சர் துரைமுருகன்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் துரைமுருகன், “கர்நாடகாவில் எந்த கட்சியாக இருந்தாலும் ஒரே அணியாக உள்ளனர் என்றும், காவிரி பிரச்சனையில் யார் சரியாக செயல்பட்டார் என்று மோதிக் கொள்வதை நாம் இனிமேலாவது நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்றும், மற்ற கட்சியினரை கேட்டுக்கொண்டார். 

அத்துடன், “தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய தண்ணீரை தடுத்து அணை கட்டுவோம் என்று கூறுவது அடாவடித்தனம் என்றும், தண்ணீருக்காக தமிழ்நாடு கேரளத்திடமும், கர்நாடகத்திடமும் கையேந்தும் நிலை உள்ளது” என்றும், அவர் குறிப்பிட்டார். 

“கர்நாடக அரசின் முயற்சியை முறியடிக்க அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு அளிக்க வேண்டும்” என்றும், சபையில் அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும், “தமிழநாட்டில் திமுக கொண்டு வந்த தீர்மானத்தை அதிமுகவும், அதிமுக கொண்டு வந்த தீர்மானத்தை திமுகவும் ஆதரித்தது” என்றும், அமைச்சர் துரைமுருகன் சுட்டிக்காட்டினார்.

“அண்டை மாநிலத்துடன் நாம் நல்லுறவை பேணும் இந்த நேரத்தில் நமது உரிமையையும் விட்டுக்கொடுக்கக்கூடாது” என்றும், வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார். 

குறிப்பாக, “காவிரி பிரச்சினை மகன், பேரன், கொள்ளுப்பேரன் வரை போகுமோ? என்ற சந்தேகம் எனக்கு நிலவுகிறது” என்று, அமைச்சர் துரைமுருகன், தனது வேதனையை பதிவு செய்தார்.

அதன் தொடர்ச்சியாக, மேகதாது விவகாரம் தொடர்பான தனித் தீர்மானத்தில் அனைத்து கட்சியினரும் பேசி வருகின்றனர்.

அதன் படி, “சட்டப் பேரவையில் கொண்டுவரப்பட்ட மேகதாது விவகாரம் தொடர்பான தனித் தீர்மானத்திற்கு பாஜக ஆதரவு தெரிவிப்பதாக” அக்கட்சியினர் எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் கூறினர். 

தொடர்ந்து பேசிய அவர், “பாஜக தனிப்பட்ட முறையில் மத்திய அரசிடம் இது குறித்து நிச்சயமாக வலியுறுத்துவோம்” என்றும், குறிப்பிட்டார்.

“மேகதாது அணைக்கு எதிரான தமிழக அரசின் தீர்மானத்திற்கு பாமக ஆதரவு தெரிவிப்பதாக” ஜி.கே.மணி தெரிவித்து உள்ளார். 

அதே போல், “காவிரியில் தமிழ்நாட்டின் உரிமையை கர்நாடகா மெல்ல பறித்து வருகிறது” என, வேல்முருகன் வேதனை தெரிவித்தார்.

அதன் தொடர்ச்சியாக பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, “டெல்டா மாவட்டங்களின் வாழ்வாதாரமாக காவிரி நீர் உள்ளது என்றும், மேகதாது அணை விவகாரம் தொடர்பான தனித் தீர்மானத்துக்கு அதிமுக ஆதரவு தெரிவிக்கும்” என்றும், அவர் கூறினார்.

“காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின் மூலம் காவிரி நீர் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டது” என்றும், அவர் சுட்டிக்காட்டினார். 

இதனையடுத்து, மேகதாது விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப் பேரவையில் கொண்டுவரப்பட்ட தனித் தீர்மானத்திற்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்த நிலையில், ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.