முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் முதன் முறையாக நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்து உள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவு, தமிழக அரசியலில் தற்போது வரை பெரும் புயலை கிளப்பிக்கொண்டுதான் இருக்கிறது. தமிழ்நாட்டில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தற்போது ஆட்சி மாற்றம் நிகழ்ந்திருந்தாலும், அவர் மறைவு பற்றிய சர்ச்சைகள் இன்று வரை ஓயாமல் அலையை போல் அடித்துக்கொண்டே இருக்கிறது.

அதாவது, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு கிட்டதட்ட 75 நாட்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதன் தொடர்ச்சியாகவே, கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி, முதலமைச்சராக இருந்த போதே ஜெயலலிதா உயிரிழந்தார்.

பிறகு, ஜெயலலிதா உயிரிழப்பில் மர்மம் இருப்பதாக, பொது மக்கள் பலரும் விமர்சனம் செய்யத் தொடங்கிய நிலை என்று, தொடர்ந்து சர்ச்சைகள் வெடித்த நிலையில் தான், கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், ஆறுமுகசாமி ஆணையத்தை அமைத்து தனி விசாரணை நடத்த, அப்போதைய அதிமுக தலைமையிலான தமிழக அரசு அதிரடியாக உத்தரவிட்டது.

அந்த வகையில், ஜெயலலிதாவின் உறவினர்கள், பாதுகாவலர்கள், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் மருத்துவம் பார்த்த மருத்துவர்கள் என்று, இது வரை சுமார் 150 க்கும் மேற்பட்டவர்கள், ஆறுமுகசாமி ஆணையத்தின் முன்பு ஆஜராகி தொடர்ந்து விளக்கம் அளித்து வந்தனர்.

இந்த நிலையில் தான், ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான வழக்கில் விசாரணை, தற்போது அடத்த கட்டத்தை எட்டி உள்ளது.

அதன் படி, இன்றைய தினம் ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பி இருந்த நிலையில் ஓபிஎஸ், இளவரசி ஆகிய இருவரும் நேரில் ஆஜர் ஆகி விளக்கம் அளித்தனர்.

இன்றைய தினம் இளவரசியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, “மருத்துவமனையில், ஜெயலலிதா இருந்த போது சசிகலா மட்டுமே உடனிருந்து பார்த்துக் கொண்டார் என்றும், நான் 75 நாட்களும் மருத்துவமனைக்கு சென்று வந்தேன். ஆனால், ஓரிரு முறை மட்டுமே கண்ணாடி வழியாக நான் ஜெயலலிதாவை பார்த்தேன்” என்று, கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

அதே போல், “கடந்த 2014 ஆம் ஆண்டு சிறைக்கு சென்ற போது, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நல குறைவாகவும், மிகுந்த மன உளைச்சலிலும் இருந்தார்” என்றும், இளவரசி பரபரப்பான வாக்குமூலத்தை அளித்து உள்ளார்.

அதன் தொடர்ச்சியாக, நீதிபதி ஆறுமுகசாமியின் விசாரணை ஆணையம் முன்பு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆஜரானார். 
அப்போது, அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், “மெட்ரோ ரயில் திறப்பு விழாவுக்கு பிறகு ஜெயலலிதாவை நான் பார்க்கவில்லை” என்று, கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

அத்துடன், “சொந்த ஊரில் இருந்த போது நள்ளிரவில் உதவியாளர் மூலம் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை தெரிந்து கொண்டேன் என்றும், மருத்துவமனை சென்றபோது தலைமைச் செயலாளரிடமே விவரங்களை கேட்டறிந்தேன் என்றும், பொது மக்களின் எண்ணத்தின் அடிப்படையிலேயே விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது” என்றும், அவர் பதில் அளித்தார் என்கிற தகவலும் வெளியாகி உள்ளன.

மேலும், “துணை முதலமைச்சர் என்ற அடிப்படையிலேயே விசாரணை ஆணையக் கோப்பில் நான் கையெழுத்திட்டேன் என்றும், ஜெயலலிதாவுக்கு நீரிழிவு நோய் தவிர வேறு நோய் எதுவும் இருந்ததா என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது” என்றும், அவர் பதில் அளித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

“கடந்த 2016 செப்டம்பர் 22 ஆம் தேதி ஜெயலலிதா மருத்துவமனையில் எதற்காக அனுமதிக்கப்பட்டார் என்பதும் எனக்கு தெரியாது என்றும், சர்க்கரை நோய் தவிர்த்து அவருக்கு இருந்த உடல் உபாதைகளைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது” என்றும், ஜெயலலிதா மரணம் பற்றி, முதல் முறையாக ஆஜரான ஓபிஎஸ், இப்படியாக பதில் அளித்து உள்ளார்.

குறிப்பாக, “ஜெயலலிதாவுக்கு என்னென்ன சிகிச்சை தரப்பட்டது? எந்த மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்? என்ற எந்த விபரமும் எனக்குத் தெரியாது” என்றும், ஓபிஎஸ் பதில் அளித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

இதனிடையே, 8 முறை சம்மனுக்கு பிறகு இன்றைய தினம் முதன் முறையாக ஆறுமுகசாமி ஆணையத்தில் இன்றைய னதிம்  ஓ.பன்னீர்செல்வம் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.