ஃபேஸ்புக்கில் காதலித்து அடுத்தடுத்து 2 பெண்களை திருமணம் செய்த காதல் கணவனை தட்டிக்கேட்ட முதல் மனைவியை, அந்த கணவன் இரும்பு கம்பியால் தாக்கிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
கோவை காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த 28 வயதான அனுஷியா என்ற இளம் பெண், ஏற்கனவே திருமணவர் ஆவர். தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கணவரை விவாகரத்து செய்து உள்ளார்.

இதனையடுத்து, அவர் அதிக நேரம் ஃபேஸ்புக்கில் செலவழித்து உள்ளார். அப்போது, விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த 25 வயதான மாரிசெல்வம் என்ற இளைஞனுடன் அனுஷியாவிற்கு நட்பு ஏற்பட்டு உள்ளது. இதனால், அவர்கள் இருவரும் நாள் கணக்கில் சாட்டிங்கில் ஈடுபட்டு வந்துள்ளனர். அதன் பிறகு, அவர்கள் இருவரும் தங்களது செல்போன் எண்ணை பகிர்ந்துகொண்டனர். 

இதனையடுத்து, அவர்களுக்குள் காதல் பற்றிக்கொண்டு விட்டதாக கூறப்படுகிறது. காதலர்களாக மாறிய அவர்கள் இருவரும் திடீரென்று திருமணம் செய்து கொண்டு, கோவையில் ஒன்றாக வசித்து வந்தனர். 

திருமணத்திற்குப் பிறகு இளம் பெண் அனுஷியா, கடன் வாங்கி தன் காதல் கணவருக்கு சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள இருசக்கர வாகனத்தை வாங்கி பரிசாக கொடுத்திருக்கிறார்.

இப்படியாக, அவர்களது வாழ்க்கை சுகமாகவும், மகிழ்ச்சியாகவும் சென்றுகொண்டிருந்த நிலையில், தனக்கு திருமணம் ஆனதை மறைத்த காதல் கணவன் மாரிசெல்வம், ஃபேஸ்புக் மூலம் நாகை மாவட்டம் வேதாரண்யத்தை சேர்ந்த 30 வயதான மாலதி என்ற மற்றொரு பெண்ணுடன் பழகி வந்து உள்ளார். 

அத்துடன், முதல் மனைவிக்குத் தெரியாமல், அந்த பெண்ணையும் அவர் காதலித்து வந்துள்ளார். 

இதனையடுத்து, மனைவி அனுஷியாவிடம் சிவகாசி செல்வதாகக் கூறிவிட்டுப் பொய் சொல்லிவிட்டு மனைவி வாங்கித் தந்த இருசக்கர வாகனத்திலேயே வேதாரண்யம் வந்து 30 வயது மாலதியை 2 வதாக திருமணம் செய்துகொண்டு, அந்த பெண்ணுடன் அங்கேயே தங்கி குடும்பம் நடத்தத் தொடங்கி உள்ளார்.

அப்போது, முதல் மனைவியின் நம்பிக்கையைப் பெற அந்த காதல் கணவன், தனது வாட்ஸ்ஆப்பில் புரொபைல் பிக்சராக மாலதியுடன் திருமணம் ஆன போட்டைவை வைத்திருந்துள்ளார். 

அப்போது, தனது கணவர் வேறொரு பெண்ணுடன் திருமண கோலத்தில் இருப்பதை முதல் மனைவியான அனுஷியா பார்த்து கடும் அதிர்ச்சியடைந்துள்ளார்.

இது குறித்து அனுஷியா விசாரித்த போது, மாரிசெல்வத்துக்கும் - மாலதிக்கும் இடையே திருமணம் நடந்தது தெரிய வந்தது. இதனால், இன்னும்  அதிர்ச்சியடைந்த முதல் மனைவி அனுஷியா, தனது பெற்றோருடன் வேதாரண்யம் சென்று மாரிசெல்வத்தை சந்தித்து நியாயம் கேட்டுள்ளார்.

அப்போது கடும் ஆத்திரமடைந்த கணவன், முதல் மனைவி அனுஷியாவை தகாத வார்த்தைகளால் கடுமையாகத் திட்டி, அங்கு கிடந்த இரும்பு கம்பியால் தாக்கி உள்ளார். இதில், பலத்த காயம் அடைந்த அனுஷியா, அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மேலும், இது குறித்து அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், மாரிசெல்வத்தை கைது செய்து, அவரிடம் இருந்த இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.