அதிமுகவை அரியணையில் அமரச் செய்வோம் என்று ஓபிஎஸ், இபிஎஸ் தொண்டர்களுக்கு எழுதியிருக்கும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

OPS

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19-ம் தேதி நடைபெற்றது. இதில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. மாநகராட்சிகளில் 1,373 வார்டுகளுக்கும், நகராட்சிகளில் 3,842 வார்டுகளுக்கும், பேரூராட்சிகளில் 7,605 வார்டுகளுக்கும் என மொத்தம் 12 ஆயிரத்து 820 வார்டுகளுக்கு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க இந்த தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 57 ஆயிரத்து 746 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.

 ஓட்டு எண்ணிக்கை நாளான நேற்று காலை 8 மணிக்கு தமிழகம் முழுவதும் 279 மையங்களில் வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. முதலில் தபால் வாக்கு எண்ணப்பட்டது. தபால் வாக்குப்பதிவுக்கு வாக்கு சீட்டுகளே பயன்படுத்தப்பட்டிருந்ததால், ஒவ்வொன்றாக பிரித்து பார்த்து, அவை அந்தந்த வேட்பாளர்களின் கணக்கில் வரவு வைக்கப்பட்டன. அப்போதே, தி.மு.க. கூட்டணி முன்னிலை வகிக்க தொடங்கியது. அதன்பிறகு, வார்டு வாரியாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. பெருநகர சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை 15 இடங்களில் வாக்கு எண்ணும் பணி விறுவிறுப்பாக நடைபெற்றது. 

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள வார்டுகளில் தி.மு.க. வேட்பாளர்களே முன்னிலை வகித்தனர். பேரூராட்சி பகுதிகளில் உள்ள வார்டுகளுக்கு முதன் முதலில் முடிவுகள் அறிவிக்கப்பட தொடங்கின. தொடர்ந்து நகராட்சி, மாநகராட்சி பகுதிக்கும் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளிவந்தன. தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 21 மாநகராட்சிகளிலும் தி.மு.க.வே வெற்றி வாகை சூடியது. பெருநகர சென்னை மாநகராட்சியில் மொத்தம் உள்ள 200 வார்டுகளில் தி.மு.க. 153, அ.தி.மு.க. 15, தி.மு.க. கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் 13, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 4, விடுதலை சிறுத்தைகள் கட்சி 4, ம.தி.மு.க. 2, இந்திய கம்யூனிஸ்டு கட்சி 1, பா.ஜனதா 1, அ.ம.மு.க. 1, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி 1 இடங்களை பிடித்தன. சுயேச்சைகள் 5 இடங்களில் வெற்றி பெற்றன.

இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவு குறித்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்த ஒன்றுதான். இதன்மூலம் ஆளும்கட்சி செயற்கையான வெற்றியை பெற்று இருக்கிறது. இந்த தேர்தல் 100 சதவீதம் சுதந்திரமாகவும், நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெற்றிருந்தால் அ.தி.மு.க. மகத்தான வெற்றியை பெற்றிருக்கும். ஆனால் அவ்வாறு நடைபெறவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது. நடந்து முடிந்த தேர்தல் என்பது முழுமையான மக்கள் எண்ணத்தின் பிரதிபலிப்பு அல்ல.

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு' என்ற அண்ணாவின் பொன்மொழிக்கு ஏற்ப மக்களின் தீர்ப்புக்கு அ.தி.மு.க. தலை வணங்குகிறது. அ.தி.மு.க.வுக்கும், அதன் தோழமை கட்சிகளுக்கும் வாக்களித்த வாக்காள பெருமக்களுக்கு இந்த தருணத்தில் எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். அ.தி.மு.க. இதற்கு முன்புகூட பல தோல்விகளை சந்தித்தாலும், அவற்றில் இருந்து மீண்டு வந்து மகத்தான வெற்றிகளை படைத்து இருக்கிறது.

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் -தர்மமே மறுபடியும் வெல்லும்’’ என்பதை மெய்ப்பிக்கும் வகையில் மக்களின் உண்மையான மன நிலையையும், விருப்பத்தையும் வெளிப்படுத்துவதற்கான ஜனநாயக ரீதியான வாய்ப்பு விரைவில் அமையும். அந்த நன்னாள் வரும்போது மக்கள் சக்தி வெல்லும், மக்களின் விருப்பப்படி அ.தி.மு.க. மீண்டும் வெற்றி பெறும். இது நிச்சயம் நடக்கும். அ.தி.மு.க.வினர் எந்தவிதமான தொய்வும் இன்றி எப்போதும் போல் கட்சி பணியை மேற்கொள்ள வேண்டுமென்றும், மக்கள் தொண்டு ஆற்ற வேண்டும் என்றும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

மேலும் அதிமுகவை அரியணையில் அமரச் செய்வோம் என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளில் உறுதிமொழி ஏற்போம் என்று ஓபிஎஸ், இபிஎஸ் தொண்டர்களுக்கு எழுதியிருக்கும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். அதிமுக தொண்டர்களுக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து வெளியிட்டிருக்கும் கடிதத்தில், வெற்றி தோல்விகளைக் கண்டு துவண்டு விடாத நெஞ்சுரத்தோடு மக்களுக்கு பணியாற்றுவோம் என்றும் தமிழக அரியணையில் அதிமுகவை அமரச் செய்வோம் என்று உறுதி மொழி ஏற்போம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.