அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட மனைவி தேர்தலில் தோற்றதால் அவருடைய கணவர் மனவருத்தம் அடைந்து திடீரென தற்கொலை செய்துகொண்டார்.

localbody election

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19-ம் தேதி நடைபெற்றது. இதில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. மாநகராட்சிகளில் 1,373 வார்டுகளுக்கும், நகராட்சிகளில் 3,842 வார்டுகளுக்கும், பேரூராட்சிகளில் 7,605 வார்டுகளுக்கும் என மொத்தம் 12 ஆயிரத்து 820 வார்டுகளுக்கு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க இந்த தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 57 ஆயிரத்து 746 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.

மேலும் இந்த தேர்தலில் ஒட்டுமொத்தமாக 60.70 சதவீதம் வாக்குகள் பதிவாகின. அதாவது, மாநகராட்சிகளில் 52.22 சதவீதமும், நகராட்சிகளில் 68.22 சதவீதமும், பேரூராட்சிகளில் 74.68 சதவீதமும் ஓட்டுகள் பதிவாகின. 39.30 சதவீத மக்கள் ஓட்டுப்போடவில்லை. இந்நிலையில் ஓட்டு எண்ணிக்கை நாளான நேற்று காலை 8 மணிக்கு தமிழகம் முழுவதும் 279 மையங்களில் வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. ஆனால், அதிகாலை 5 மணி முதலே வாக்கு எண்ணும் மையத்துக்கு வேட்பாளர்களும், முகவர்களும் வரத்தொடங்கினார்கள்.

முதலில் தபால் வாக்கு எண்ணப்பட்டது. தபால் வாக்குப்பதிவுக்கு வாக்கு சீட்டுகளே பயன்படுத்தப்பட்டிருந்ததால், ஒவ்வொன்றாக பிரித்து பார்த்து, அவை அந்தந்த வேட்பாளர்களின் கணக்கில் வரவு வைக்கப்பட்டன. அப்போதே, தி.மு.க. கூட்டணி முன்னிலை வகிக்க தொடங்கியது. அதன்பிறகு, வார்டு வாரியாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. பெருநகர சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை 15 இடங்களில் வாக்கு எண்ணும் பணி விறுவிறுப்பாக நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து ஆரம்பம் முதல் ஆளுங்கட்சியான தி.மு.க.வின் கையே ஓங்கியிருந்தது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள வார்டுகளில் தி.மு.க. வேட்பாளர்களே முன்னிலை வகித்தனர். பேரூராட்சி பகுதிகளில் உள்ள வார்டுகளுக்கு முதன் முதலில் முடிவுகள் அறிவிக்கப்பட தொடங்கின. தொடர்ந்து நகராட்சி, மாநகராட்சி பகுதிக்கும் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளிவந்தன. தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 21 மாநகராட்சிகளிலும் தி.மு.க.வே வெற்றி வாகை சூடியது. பெருநகர சென்னை மாநகராட்சியில் மொத்தம் உள்ள 200 வார்டுகளில் தி.மு.க. 153, அ.தி.மு.க. 15, தி.மு.க. கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் 13, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 4, விடுதலை சிறுத்தைகள் கட்சி 4, ம.தி.மு.க. 2, இந்திய கம்யூனிஸ்டு கட்சி 1, பா.ஜனதா 1, அ.ம.மு.க. 1, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி 1 இடங்களை பிடித்தன. சுயேச்சைகள் 5 இடங்களில் வெற்றி பெற்றன.

இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 19-வது வார்டில் அ.தி.மு.க. சார்பில் சுகுணாதேவி அவருக்கு வயது 52 போட்டியிட்டார். இவருடைய கணவர் நாகராஜன் அவருக்கு 57. இவர் நகராட்சி துப்புரவு பணி மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று சாத்தூரில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. தனது வார்டில் 380 ஓட்டுகள் வித்தியாசத்தில் சுகுணாதேவி, தி.மு.க. வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார். இதனால் மனவருத்தம் அடைந்த அவருடைய கணவர் நாகராஜன், தனது வீட்டுக்கு சென்று திடீரென விஷம் குடித்தார். இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சாத்தூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நாகராஜன் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.