நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பத்து ஆண்டுகளுக்கு பிறகு அ.தி.மு.கவை தோற்கடித்து, தி.மு.க. அமோக வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.

local body election

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19-ம் தேதி நடைபெற்றது. இதில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. மாநகராட்சிகளில் 1,373 வார்டுகளுக்கும், நகராட்சிகளில் 3,842 வார்டுகளுக்கும், பேரூராட்சிகளில் 7,605 வார்டுகளுக்கும் என மொத்தம் 12 ஆயிரத்து 820 வார்டுகளுக்கு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க இந்த தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 57 ஆயிரத்து 746 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.

மேலும் இந்த தேர்தலில் ஒட்டுமொத்தமாக 60.70 சதவீதம் வாக்குகள் பதிவாகின. அதாவது, மாநகராட்சிகளில் 52.22 சதவீதமும், நகராட்சிகளில் 68.22 சதவீதமும், பேரூராட்சிகளில் 74.68 சதவீதமும் ஓட்டுகள் பதிவாகின. 39.30 சதவீத மக்கள் ஓட்டுப்போடவில்லை. இந்நிலையில் ஓட்டு எண்ணிக்கை நாளான நேற்று காலை 8 மணிக்கு தமிழகம் முழுவதும் 279 மையங்களில் வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. ஆனால், அதிகாலை 5 மணி முதலே வாக்கு எண்ணும் மையத்துக்கு வேட்பாளர்களும், முகவர்களும் வரத்தொடங்கினார்கள்.

இந்நிலையில் ஓட்டு எண்ணிக்கையை பாதுகாப்பாக நடத்தி முடிக்க, அனைத்து மையங்களிலும் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. எனவே, வேட்பாளர்களும், முகவர்களும், செய்தி சேகரிக்க வந்த பத்திரிகையாளர்களும் 3 இடங்களில் நின்ற போலீசாரிடம் அடையாள அட்டையை காட்டிய பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். சரியாக காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. இந்த பணியில் சுமார் 30 ஆயிரம் அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்ற வாக்கு எண்ணும் பணியை கவனிக்க தனித்தனியாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தனர்.

முதலில் தபால் வாக்கு எண்ணப்பட்டது. தபால் வாக்குப்பதிவுக்கு வாக்கு சீட்டுகளே பயன்படுத்தப்பட்டிருந்ததால், ஒவ்வொன்றாக பிரித்து பார்த்து, அவை அந்தந்த வேட்பாளர்களின் கணக்கில் வரவு வைக்கப்பட்டன. அப்போதே, தி.மு.க. கூட்டணி முன்னிலை வகிக்க தொடங்கியது. அதன்பிறகு, வார்டு வாரியாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. பெருநகர சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை 15 இடங்களில் வாக்கு எண்ணும் பணி விறுவிறுப்பாக நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து ஆரம்பம் முதல் ஆளுங்கட்சியான தி.மு.க.வின் கையே ஓங்கியிருந்தது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள வார்டுகளில் தி.மு.க. வேட்பாளர்களே முன்னிலை வகித்தனர். பேரூராட்சி பகுதிகளில் உள்ள வார்டுகளுக்கு முதன் முதலில் முடிவுகள் அறிவிக்கப்பட தொடங்கின. தொடர்ந்து நகராட்சி, மாநகராட்சி பகுதிக்கும் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளிவந்தன. தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 21 மாநகராட்சிகளிலும் தி.மு.க.வே வெற்றி வாகை சூடியது. பெருநகர சென்னை மாநகராட்சியில் மொத்தம் உள்ள 200 வார்டுகளில் தி.மு.க. 153, அ.தி.மு.க. 15, தி.மு.க. கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் 13, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 4, விடுதலை சிறுத்தைகள் கட்சி 4, ம.தி.மு.க. 2, இந்திய கம்யூனிஸ்டு கட்சி 1, பா.ஜனதா 1, அ.ம.மு.க. 1, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி 1 இடங்களை பிடித்தன. சுயேச்சைகள் 5 இடங்களில் வெற்றி பெற்றன.

பல காலமாக அ.தி.மு.க.வின் கோட்டையாக இருந்த கொங்கு மண்டலத்திலும் தி.மு.க. கால்பதித்து வரலாற்று சாதனை படைத்தது. அங்குள்ள பெரும்பாலான இடங்களையும் தி.மு.க. கைப்பற்றி அசத்தியது. மொத்தம் உள்ள 138 நகராட்சிகளில் தி.மு.க. 132 இடங்களையும், அ.தி.மு.க. 3 இடங்களையும், மற்றவை 3 இடங்களையும் கைப்பற்றியது. இதேபோல், 489 பேரூராட்சிகளில் தி.மு.க. 435 இடங்களையும், அ.தி.மு.க. 15 இடங்களையும், பா.ஜனதா 5 இடங்களையும், மற்றவை 25 இடங்களையும் பிடித்தது.

வெற்றி பெற்ற உறுப்பினர்கள் அனைவரும் வரும் மார்ச் 2-ம் முதல் தேதி பதவி ஏற்றுக்கொள்கிறார்கள். தொடர்ந்து மாநகராட்சி மேயர் - துணை மேயர், நகராட்சி தலைவர் - துணைத்தலைவர், பேரூராட்சி தலைவர் - துணைத்தலைவர் ஆகிய பதவி இடங்களுக்கு மார்ச் 4-ம் தேதி மறைமுக தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் வார்டு உறுப்பினர்களாக வெற்றி பெற்றவர்கள் வாக்களிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.