“தேசிய கல்விக் கொள்கை, நீட் தேர்வை விட மிக கொடுமையானது என்பதால், உயர் கல்வியில் தற்போது உள்ள நடைமுறையை மாற்றக்கூடாது” என்று, உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி மிக கடுமையாக விமர்சித்து உள்ளார்.

நீட்தேர்வில் குறைந்த மதிப்பெண்ணில் தேர்ச்சி பெற்றதாலும், தோல்வி அடைந்த காரணத்தாலும், மருத்துவ சீட்டு கிடைக்குமா? என்கிற சந்தேகத்தாலும், அந்த தேர்வை எதிர்கொள்ள பயந்து போன பல மாணவர்களும் அடுத்தடுத்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட நிகழ்வுகள் தொடர்ந்து தமிழ்நாட்டில் நிகழ்ந்துகொண்டு தான் இருக்கின்றன.

இதனால், நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாட்டில் மிக பெரிய அளவுக்கு எதிர்பு இருக்கிறது. இதனால், தமிழ்நாட்டில் நீட் தேர்வு மிக பெரிய கருத்து மோதலாக எழுந்திருக்கும் நிலையில், நீட் தேர்வி எதிர்ப்பு என்பது  தமிழக அரசின் நிலைபாடாகவும் இருந்து வருகிறது.

அந்த வகையில், தமிழ்நாடு அரசியல் வரலாற்றில், ஆளுநர் திருப்பியனுப்பிய மசோதாவை மீண்டும் தாக்கல் செய்வதற்கு சிறப்பு கூட்டத்தொடரை முதன் முறையாக நடத்தி, அந்த நீட் விலக்கு மசோதாவை சட்டமன்றத்தல் மீண்டும் நிறைவேற்றப்பட்டு, மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.

இப்படியான தருணத்தில் தான், “தேசிய கல்விக் கொள்கை, நீட் தேர்வை விட கொடுமையானது என்பதால், உயர் கல்வியில் தற்போது உள்ள நடைமுறையை மாற்றக்கூடாது” என்று, தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

இது குறித்து, வரைவு தேசிய உயர் கல்வித் தகுதிகள் மற்றும் கட்டமைப்பு குறித்த அரசின் நிலைப்பாட்டை விளக்கி கூறும் வகையில், அமைச்சர் பொன்முடி, தற்போது அறிக்கை வெளியிட்டு உள்ளார். 

அந்த அறிக்கையில், “தேசிய கல்விக் கொள்கை என்பது அனைவருக்கும் கல்வி எனும் தமிழக அரசின் நிலைப்பாட்டை சீர்குலைக்கும் வகையில் இருப்பதால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதனை தொடர்ந்து எதிர்த்து வருவதாக” குறிப்பிட்டு உள்ளார்.

அத்துடன், “கலை, அறிவியல் கல்லூரிகளில் பயில நுழைவுத் தேர்வு கட்டாயம் என்பது எளிய மாணவர்களின் உயர் கல்வியைத் தடுக்கும் நோக்கில் எடுக்கப்படும் நடவடிக்கை” என்றும், பொன்முடி பகிகரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார். 

மேலும், “இது, தடுக்கப்பட வேண்டும் என்றும், உயர் கல்வியில் தற்போது உள்ள நடைமுறையே தொடர வேண்டும் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு” என்றும், வெளிப்படையாகவே அறிவித்து உள்ளார்.

“தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைக்கு கொண்டு வந்தால் மாணவர்களின் இடை நிற்றல் அதிகரிக்கும் என்றும், இது விளிம்பு நிலை மாணவர்களின் நலனுக்கு எதிரானது” என்றும், அமைச்சர் பொன்முடி தனது கருத்தை கூறியுள்ளார்.

குறிப்பாக, “வரைவு செயலாக்கத் திட்டம் குறித்து ஆய்வு செய்து, தமிழக அரசின் நிலைப்பாடு விரைவில் மத்திய அரசுக்கு அனுப்பப்படும் என்றும், மாநில கல்விக் கொள்கையை உருவாக்க குழு அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும்” உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்து உள்ளார்.