மலையாள திரை உலகின் பழம்பெரும் நடிகைகளில் மிக முக்கியமானவர் நடிகை லலிதா. கேரளத்தின் கேரளா பீப்பிள்ஸ் ஆர்ட்ஸ் கிளப் (KPAC) எனும் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கலைப்பிரிவில் பல பிரச்சார நாடகங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளதால் இன்றும் KPAC லலிதா என்று அழைக்கப்படுகிறார்.

மலையாளம் மற்றும் தமிழ் திரை உலகில் கிட்டத்தட்ட 500 படங்களுக்கு மேல் நடித்துள்ள நடிகை KPAC லலிதா, இந்திய திரை உலகின் சிறந்த இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் பரதனை திருமணம் செய்து கொண்டார். மலையாள திரை உலகின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவரான பரதன் தமிழில் உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இணைந்து நடித்த தேவர் மகன் திரைப்படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக தமிழில் கமல்ஹாசனின் ராஜபார்வை, தளபதி விஜய்யின் காதலுக்கு மரியாதை, இயக்குனர் மணிரத்தினத்தின் அலைபாயுதே & காற்று வெளியிடை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகை KPAC லலிதா கடைசியாக தமிழில் நடிகர் RJ பாலாஜி இயக்கி நடித்து விரைவில் ரிலீஸாகவுள்ள புதிய படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும் மலையாளத்தில் மம்முட்டி நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் பீஷ்ம பர்வம் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் லலிதா நடித்துள்ளார்

 சினிமாவில் மட்டுமல்லாது தொலைக்காட்சிகளிலும் முன்னணி மெகா தொடர்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள லலிதா கேரள மாநிலத்தின் கொச்சி அருகே உள்ள திருப்பூணிதுறையில் மகன் சித்தார்த் மற்றும் மகள் ஸ்ரீ குட்டி ஆகியோருடன் தனது இல்லத்தில் வசித்து வந்தார். கடந்த சில மாதங்களாக உடல் நல குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்துள்ள நிலையில் நேற்று (பிப்ரவரி 22) நடிகை லலிதா உயிரிழந்தார். அவருக்கு வயது 74.

பழம்பெரும் நடிகை KPAC லலிதாவின் மறைவு கேரளா மற்றும் மலையாள திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகை KPAC லலிதாவின் மறைவுக்கு கலாட்டா குழுமம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. மேலும் தென்னிந்திய திரையுலகை சேர்ந்த பல கோடி ரசிகர்களும் திரை பிரபலங்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.