வலிமை படத்தில் ஜிப்ரான் BGM... உறுதிப்படுத்திய பிரபலம்! வீடியோ இதோ
By Anand S | Galatta | February 22, 2022 23:00 PM IST
தமிழ் சினிமா ரசிகர்களின் நீண்ட காத்திருப்புகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் மத்தியில் வருகிற வியாழக்கிழமை (பிப்ரவரி 24ஆம் தேதி) உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது அஜித்குமாரின் வலிமை படம். அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியிருக்கும் வலிமை திரைப்படத்தை இயக்குனர் H.வினோத் எழுதி இயக்கியுள்ளார்.
தயாரிப்பாளர் போனி கபூரின் பே வியூ ப்ராஜெக்ட்ஸ் தயாரிப்பில் இதுவரை இந்திய திரையுலகில் பார்த்திராத அளவுக்கு அதிரடியான ஸ்டன்ட் காட்சிகள் மற்றும் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த வலிமை படத்திற்கு திலீப் சுப்பராயன் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்ற, நீரவ்ஷா ஒளிப்பதிவில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
சமீபத்தில் வலிமை திரைப்படத்தின் இறுதிகட்ட சவுண்ட் மிக்ஸிங் பணிகள் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், வலிமை படத்தில் சவுண்ட் இன்ஜினியராக பணியாற்றிய ராஜா கிருஷ்ணன் நமது கலாட்டா சேனலுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் வலிமை படம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
அதில் குறிப்பாக வலிமை பபடத்தில் சையமைப்பாளர் ஜிப்ரான் பின்னணி இசை சேர்த்துள்ளார் என அதிகாரப்பூர்வமாக தெரிவித்தார். இது குறித்து பேசிய சவுண்ட் இன்ஜினியர் ராஜா கிருஷ்ணன், “யுவன் ஷங்கர் ராஜாவுடன் இணைந்து நிறைய படங்களில் பணியாற்றியுள்ளேன். வலிமை திரைப்படத்தின் இறுதி சவுண்ட் மிக்சிங் பணிகளின்போது நான் யுவன் ஷங்கர் ராஜாவுடன் பணியாற்றவில்லை, ஆமாம் நான் ஜிப்ரான் உடன் இணைந்து பணியாற்றினேன். நான், ஜிப்ரான் இயக்குனர் H.வினோத் ஒன்றாக அமர்ந்து இறுதி சவுண்ட் மிக்சிங் பணிகளை செய்து முடித்தோம். ஜிப்ரானின் பின்னணி இசையும் வலிமை படத்தில் இடம்பெற்றுள்ளது” என தெரிவித்துள்ளார்.
மேலும் இறுதி கட்ட பணிகள் நிறைவடைந்து படத்தை பார்வையிட்ட அஜித்குமார் இயக்குனர் H.வினோத்தை கட்டிபிடித்து பாராட்டியது குறித்தும் இயக்குனர் H.வினோத், நடிகர் அஜித்குமார் மற்றும் வலிமை படம் குறித்தும் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வரும் அந்த வீடியோ இதோ...