கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்ததால், பெற்ற குழந்தையை தாயே கொலை செய்ய முயன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தான், இப்படி ஒரு கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகில் உள்ள காமராஜ் நகரைச் சேர்ந்த 20 வயதான சித்ரா என்ற இளம் பெண், சிலரின் தவறான வழிகாட்டுதலால், அந்த பகுதியில் திருமணத்தை மீறிய உறவில் ஈடுபட்டு வந்தார் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக, அந்த 20 வயது பெண்ணுக்கு 5 வயதில் கார்த்திக் என்ற மகனும், 2 வயதில் அருண் என்ற மகன் உட்பட இரு பிள்ளைகள் உள்ளனர்.

திருமணத்தை மீறிய உறவில் பிறந்த இரு குழந்தைகளின் பாதுகாப்பிற்கு இளம் பெண் சித்ரா, அங்குள்ள கருமாங்கழனி பகுதியைச் சேர்ந்த 45 வயதான ஆனந்தன் என்பவரை, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார்.

இதனையடுத்து, அந்த நபருடன் சித்ரா குடும்பம் நடத்தி வந்தார். இப்படிப்பட்ட சூழ்நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சித்ரா வீட்டில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

இதில், 2 வயது குழந்தை அருண் சுமார் 60 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனையடுத்து, சில வாரங்களில் அந்த சிறுவன் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளார். ஆனால், அடுத்த சில நாளில் சந்தேகமான முறையில் அந்த சிறுவன் உயிரிழந்தான்.

இது தொடர்பாக, ஸ்ரீபெரும்புதூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். அத்துடன், உயிரிழந்த பாலகன் அருணின் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்து தயார் சித்ராவிடம் ஒப்படைத்தனர்.

இந்த நிலையில், நேற்றைய தினம் இரவு தாயார் சித்ரா, தன் குழந்தையின் கழுத்தை நெரித்துக் கொலை செய்ய முயன்ற வீடியோ, அந்த பகுதி மக்களிடையே சமூக வலைத்தளங்களில் பரவத் தொடங்கியது. இந்த வீடியோ அந்த பகுதியின் போலீசாரின் கவனத்திற்கும் சென்றது.

இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், 20 வயதான தாய் சித்ரா, தனது குழந்தையைக் கழுத்தை  நெரித்து கொலை செய்ய முயன்றது தெரிய வந்தது.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த போலீசார், தொடர்ந்து சித்ராவைக் கைது செய்து தீவிரமாக விசாரணை செய்தனர். 

அப்போது, “சித்ரா, திருமணத்திற்கு முன்பு பல ஆண்களுடன் தவறான உறவு முறையில் இருந்ததன் மூலம் தான், அவருக்கு 2 ஆண் குழந்தைகள் பிறந்தது என்பது தெரிய வந்தது. இதனால், அந்த பெண்ணை ஊரில் உள்ளவர்கள் கேவலமாகப் பேசியதால், ஊர் மக்களின் வாயை மூடுவதற்காக ஆனந்தன் என்பவரை சித்ரா திருமணம் செய்துகொண்டதும் தெரிய வந்தது. 

இதனையடுத்து, சித்ராவிற்கு அங்குள்ள கட்சிபட்டு பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞருடன் கள்ளக் காதல் ஏற்பட்டுள்ளது. அந்த இளைஞனுடன் தனிமையில் உல்லாசம் அனுபவிக்கும் போது, அவரது இரு குழந்தைகளும் அடிக்கடி இடையூறாக செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால், பெற்ற தாயே தனது இரு குழந்தைகளையும் கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.

அதன் படி, நேற்று இரவு குறிப்பிட்ட அந்த இளைஞருடன் சேர்ந்து முதல் குழந்தையான கார்திக்கை கழுத்து நெரித்து கொலை செய்ய சித்ரா முயன்றுள்ளார். இதனை, அந்த கள்ளக் காதலன் தனது செல்போனில் வீடியோ எடுத்து, தனது சக நண்பர்களுக்கும் அனுப்பி உள்ளார். அந்த நண்பர்கள் மூலமாக அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மேலும் பரவி உள்ளது. அதன்படியே, அந்த வீடியோவை பார்த்த போலீசார், சித்ராவை கண்டுபிடித்து தற்போது கைது செய்துள்ளனர்.

மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், சித்ராவின் 2 வது மகன் அருண் தீ காயமடைந்து உயிரிழந்தாரா? அல்லது மண்ணெண்ணெய் ஊற்றி சித்ரா கொலை செய்தாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தி உள்ளனர். இதனால், அந்த பகுதியில் அதிர்ச்சியும் பரபரப்பும் ஏற்பட்டது.