நீலகிரி விமானப்படை ஹெலிகாப்டர் விபத்து நிகழ்ந்த பகுதியில் இருந்து கருப்புபெட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளது.

bipin rawat

நீலகிரி மாவட்டம், குன்னூர் வெலிங்டனில் ராணுவ உயரதிகாரிகளுக்கான பயிற்சிக் கல்லுாரி உள்ளது. இங்கு இன்று நடக்க இருந்த ராணுவ உயரதிகாரிகளுக்கான கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்திய முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் நான்கு பைலட்கள் உள்பட 14 பேர், நேற்று  கோவை மாவட்டம், சூலுாரிலுள்ள ராணுவ விமானப்படைத் தளத்திலிருந்து 11.30 மணியளவில் ஹெலிகாப்டரில் வெலிங்டன் நோக்கி கிளம்பினர். 

அதனைத்தொடர்ந்து  அவர்கள் சென்ற ஹெலிகாப்டர் குன்னுார் மலைப்பாதையிலுள்ள காட்டேரி  பள்ளத்தாக்குக்கு மேலே பறந்த போது கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 13 பேர் உயிரிழந்தனர். 

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் சென்ற எம்.ஐ. 17வி 5 ரக ஹெலிகாப்டர் ரஷியாவில் தயாரிக்கப்பட்டது. ஹெலிகாப்டர் விழுந்த இடம் மலைப்பள்ளத்தாக்கு பகுதியாகும். ஹெலிகாப்டர் மோதி தீப்பிடித்த வேகத்தில் உதிரிபாகங்கள் எரிந்து நலாபுறமும் சிதறின. விமானத்தில் உள்ள கருப்பு பெட்டியில் விபத்துக்கு முன் கடைசி நிமிடத்தில் பைலட் பேசியது பதிவாகி இருக்கும். 

மேலும் எவ்வளவு அடி உயரத்தில் பறந்தது என்பன உள்ளிட்ட விவரங்களும் பதிவாகி இருக்கும். விபத்துக்கான காரணத்தை கண்டறிய கருப்பு பெட்டி முக்கியமானது என்பதால், கருப்பு பெட்டியை தேடும் பணி நடைபெறுகிறது. அந்த பகுதியில் இரவில் அதிக வெளிச்சம் தரக்கூடிய மின்விளக்குகளை பொருத்தி, விமானப்படையினர் தேடுதல் பணியில் தீவிரமாக ஈடுபட்டுவந்தனர்.

இந்நிலையில் நீலகிரியில் விபத்து நிகழ்ந்த காட்டேரி பகுதியில் இருந்து கருப்புப்பெட்டி உள்ளிட்ட 3 பொருட்களை ராணுவ அதிகாரிகள் மீட்டுள்ளனர். கண்டெடுக்கப்பட்ட கருப்புப்பெட்டியை டெல்லி அல்லது பெங்களூருக்கு கொண்டு சென்று ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து விமான கட்டுப்பாட்டு அறையுடன் விமானியின் பேச்சு பதிவு அடங்கிய  கருப்பு பெட்டியை ஆய்வு செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். டெல்லியில் இருந்து வந்த தொழில் நுட்பகுழு, வெலிங்டன் ராணுவ மைய குழு கருப்புப்பெட்டியை கண்டெடுத்தது. கருப்புப்பெட்டி என்பது அதன் நிறத்தை குறிப்பிடுவது அல்ல, பல்வேறு தகவல்கள் அதில் பதிவாகி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.