ஆண் குரங்கு ஒன்று, அநாதையாக நின்ற குட்டி நாயைத் தத்தெடுத்து தாயான நிகழ்வு, நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

தாயின் அன்பும், தந்தையின் அரவணைப்புமே பிள்ளைகளைப் பேரன்பு கொள்ளச் செய்யும். இது, மனிதர்களுக்கு மட்டுமல்ல, விலங்குகளுக்கும் பொருந்தும் என்பதை மீண்டும் ஒரு முறை நிறுபித்துக்காட்டிருக்கிறது தாய் மனமும், தந்தை மனமும் ஒருங்கேப் பெற்ற குரங்கு ஒன்று.

அதாவது, கடலூர் மாவட்டம் மேல்புளியங்குடி கிராமத்தில் கடந்த 10 நாள்களாக ஆண் குரங்கு ஒன்று, அந்த பகுதியில் சுற்றி திரிந்து வந்தது, அப்போது, அந்த பகுதியில் பிறந்த சில நாட்களே ஆன நாய்க்குட்டி ஒன்று, யாரும் ஆதரவற்று, அநாதையாகத் தன்னந் தனியாக அந்த பகுதியில் நின்றுகொண்டு இருந்தது.

இதனைக் கவனித்த அந்த ஆண் குரங்கு, அந்த நாய் குட்டியைத் தூக்கி வளர்த்து வருகிறது. தன்னுடைய குழந்தையை வளர்ப்பது போல், தன்னுடைய கவனம் முழுவதையும், குட்டி நாயைக் கொஞ்சுவதில் மட்டுமே அந்த குரங்கு செலுத்தி வருகிறது. 

குறிப்பாக. அந்த குரங்கிற்குப் பால் தர இயலாத குறை மட்டும் தான் இருக்கிறது. மற்றபடி, அனைத்து விதமான அன்பையும், அரவணைப்பையும், அந்த ஆண் குரங்கு, அந்த குட்டி நாயிடம் பாசம் காட்டி வளர்த்து வருகிறது. 

முக்கியமாக, அந்த நாய்க்குட்டியைச் செல்லமாய் தூக்கி தனது வயிற்றுப் பகுதியில் வைத்துக்கொண்டு, அந்த ஆண் குரங்கானது அங்கும் இங்கும் சென்றும் தாவியும் வருகிறது. அந்த நாய்க்குட்டியை கீழேயே அதிக நேரம் விடுவதில்லை. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள், அந்த குரங்கிடம் இருந்து அந்த நாய் 

குட்டியைப் பிரிக்க அந்த பகுதி மக்கள் சிலர் பல தின்பண்டங்களை வாங்கிக் கொடுத்தனர். ஆனால், அவற்றையெல்லாம் வழக்கம் போல் ஓடிச் சென்று எடுக்காமல், வழக்கத்தை விட, தாய்மையுடன், அந்த நாய்க்குட்டியை அந்த குரங்கு பராமரித்து வருகிறது.

மேலும், அப்படி தரப்படும் உணவுகளை பொது மக்கள் அங்கிருந்து சென்ற பிறகே, அந்த குரங்கு அதனை எடுத்து உண்கிறது. ஆண் குரங்கின் இந்த தாய்மை குணத்தைப் பார்த்த அப்பகுதி மக்கள், அப்படியே நெகிழ்ச்சியில் நெக்குருகிப் போய் உள்ளனர். இதனை பலரும், தங்களது செல்போனில் வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். இதனால், இந்த தாய்மை மனம் படைத்த ஆண் குரங்கு, இணையத்தில் தற்போது வைரலாகத் தொடங்கி உள்ளது.

இதனிடையே, “இந்த ஆண் குரங்கின் தாய் பாசமானது, பெற்ற பிள்ளையைக் குப்பைத் தொட்டியில் தூக்கி வீசியும், பிள்ளைகளை ஏதோ ஒரு காரணத்திற்காகக் கொலை செய்யும் பெற்றோருக்குக் கண்ணத்தில் பளார் என்று அறைந்தது போல் அமைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.