ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசிக்கும் இளைஞர் ஒருவர், 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியைக் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டம் கீறிப்பாறை அடுத்த தடிக்காரகோணம் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் வசித்து வந்தார். தினமும் கூலி வேலை பார்க்கும் முருகனுக்கு, திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். 

இப்படியான சூழ்நிலையில், திருமணம் ஆன முருகன் அதே பகுதியைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியுடன் பழகி வந்திருக்கிறார். 

ஆனால், அந்த மாணவிக்கு முருகனுக்கு திருமணம் ஆன விசயம் பற்றி எதுவும் தெரியவில்லை என்று கூறப்படுகிறது.

தொடக்கத்தில், அந்த மாணவியுடன் முருகன் நட்பு பாராட்டி வந்த நிலையில், அதன் பிறகு காதலிக்கத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.

அத்துடன், அந்த மாணவியைத் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி, அந்த மாணவியை அங்கிருந்து கடத்திச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. 

அதன் தொடர்ச்சியாக அந்த 12 ஆம் வகுப்பு மாணவி அன்றாடம் பள்ளிக்குச் சென்ற வந்த நிலையில், தற்போது அந்த மாணவி கர்ப்பமடைந்து உள்ளார்.

இந்த தகவல், மாணவியின் பெற்றோருக்குத் தெரிய வந்த நிலையில், அவர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். இது பற்றி மாணவியிடம் விசாரித்த போது, அவர் முருகனை கை காட்டி உள்ளார்.

அதன் தொடர்ச்சியாக, அந்த முருகனைப் பற்றி, மாணவியின் பெற்றோர் விசாரித்து உள்ளனர். அப்போது, அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி, மனைவி மற்றும் குழந்தைகள் இருப்பது தெரிய வந்தது. இதனால், இன்னும் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர், அங்குள்ள கீறிப்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வந்தனர். இந்த நிலையில், முருகன் அந்த மாணவி உடன் திடீரென்று தலைமறைவானார். 

இதனை அடுத்து, அவர்கள் இருவரையும் போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்த நிலையில், அவர்கள் இருவரும் கேரளாவில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அங்கு விரைந்து சென்ற போலீசார், அங்கு முருகனை மடக்கிப் பிடித்தனர். அத்துடன், முருகன் வசம் இருந்த அந்த மாணவியை போலீசார் பத்திரமாக மீட்டு அழைத்து வந்தனர். ஊருக்கு வந்ததும், மீட்கப்பட்ட சிறுமியை, அவரது பெற்றோரிடம் பேலீசார் ஒப்படைத்தனர்.

மேலும், கைது செய்யப்பட்ட முருகன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீசார், அவரை நாகர்கோயில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் அவரை சிறையில் அடைத்தனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.