சென்னை மாநகராட்சியின் மேயராக பதவி ஏற்ற பிரியாவை, மாநகராட்சி கமி‌ஷனர் ககன்தீப்சிங் பேடி, மேயரின் சிம்மாசனத்திற்கு அழைத்து வந்து அவரை அமர வைத்தார்.

தமிழகத்தில் சென்னை, தாம்பரம், ஆவடி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருச்சி, மதுரை, கோவை, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 21 மாநகராட்சிகளையும் திமுக மற்றும் அனத் கூட்டணி கட்சிகள் கைப்பற்றிய நிலையில், வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அனைவரும் நேற்று முன்தினம் பதவி ஏற்றுக்கொண்டனர். 

இந்த நிலையில் மாநகராட்சிகளுக்கான மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சிகளுக்கான தலைவர் மற்றும் துணை தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு நடைபெற்ற நிலையில் மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் பதிவகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவரும் இன்று காலை முதல் பதவி ஏற்றக்கொண்டனர்.

அந்த வகையில், 360 ஆண்டுகாலம் பழமை வாய்ந்த சென்னை மாநகராட்சியில் இது வரை 46 மேயர்கள் பதவி வகித்து உள்ளனர். 

அதுவும், ஆங்கிலேயர் கால மேயர்களை தொடர்ந்து தமிழர்கள் மேயராக பதவி வகித்த சிறப்பும் சென்னைக்கு இருக்கிறது.

அந்த வகையில், சென்னை மேயர் பிரியா ராஜனுக்கு, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆகியோர் மேயருக்கான செங்கோலை பிரியாவிடம் வழங்கினர். 

இவற்றுடன், மேயராக பொறுபேற்ற பிரியா ராஜனுக்கு, அந்த மேயருக்கான அங்கியை சென்னை ஆணையர் ககன்தீப் சிங் பேடி, வழங்கியதுடன்,  மாநகராட்சி கமி‌ஷனர் ககன்தீப்சிங் பேடி, மேயரின் சிம்மாசனத்திற்கு பிரியாவை அழைத்து வந்து அவரை அந்த இருக்கையில் அமர வைத்தார்.

சென்னை மாநகராட்சியின் புதிய மேயர் பிரியா பதவியேற்று அந்த இருக்கையில் அமர்ந்தவுடன் அனைத்து கவுன்சிலர்களும் கைத்தட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த சூழலில், சென்னை மாநகராட்சி மேயராக பதவி ஏற்ற பிரியா யார்? அவரின் பின்னணி என்ன?” என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

- சென்னை மாநகராட்சியில் பட்டியலின பெண் ஒருவர், மேயராக இப்போது தான் முதன் முதலாக பதவி ஏற்கிறார்.

- சென்னை மாநகராட்சி மேயரான ஆர்.பிரியா, எம்காம் பட்டதாரி ஆவார். 

- சென்னை மாநகராட்சி மேயரான பிரியாவிற்கு 28 வயது மட்டுமே ஆகிறது. சென்னை மாநகராட்சியில் இவ்வளவு இளம் வயதில் ஒருவர் மேயராக பதவி ஏற்பதும், இதுவே முதல் முறையாகும்.

- மிகவும் இளம் வயது மேயர் என்கிற பெருமையையும் பிரியா பெற்று உள்ளார்.

-  வட சென்னையைச் சேர்ந்த முதல் மேயர் உள்ளிட்ட பெருமைகளை பெற்றுள்ளார்.

- மேயர் பிரியா, திருவிக நகர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ செங்கை சிவத்தின் மகள் ஆவார். 

- திராவிட முன்னேற்ற கழகத்திற்கு மிகவும் விசுவாசமான குடும்பமான பிரியாவின் குடும்பம். 

- கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கும் மேலாக திமுகவில் இணைந்து, தொடர்ந்து பணியாற்றி வருகிறது பிரியாவின் குடும்பம். 

- அமைச்சர் சேகர்பாபு பொறுப்பு வகிக்கும் சென்னை கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதால், பிரியா பெயர்  பலகட்ட பேச்சு வார்த்தைக்கு பிறகு, திமுக தலைமையால் தேர்வு செய்யப்பட்டது.

இதனிடையே, கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை மேயர் பதவி பட்டியலின சமூக பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளதால், சென்னையின் முதல் பெண் மேயர் யார் என்ற எதிர்பார்ப்பு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்தே எழுந்த நிலையில், அந்த கேள்விக்கு பிரியா விடை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.