“தமிழக அரசின் ஆவின் பொருட்களின் விலை இன்று முதல் உயர்த்தப்படுவதாக” ஒருங்கிணைந்த பால்வளத்துறை அறிவித்து உள்ளது.

திமுக அரசு ஆட்சிக்கு வந்ததும், ஏற்கனவே அறிவித்திருந்தபடி, ஆவின் பால் விலையை அதிரடியாக குறைத்து உத்தரவிட்டது. ஆனால், தற்போது ஆவின் பாலின் விலை இன்று முதல் உயர்த்தி வழங்கப்படுவதாக ஆவின் அறிவித்துள்ளது பொது மக்களிடையே, சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த நிறுவனம் தமிழக அரசின் பால்வளத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.

அதாவது, தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின், பால் கொள்முதல் செய்வது, பதப்படுத்தும் செயல் முறை, குளிரூட்டுதல், விற்பனை ஆகிய அனைத்து செயல்களையும் ஒருங்கிணைந்து செய்து வருகிறது. 

அத்துடன், ஆவின் பால் நிறுவனம் தமிழக மக்களின் மிகவும் பிரபலமான மற்றும் நம்ப தகுந்த பால் நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. 

இங்கு கிடைக்கும் பால் பொருட்களின் தரம் மற்றும் அதன் நம்பகத்தன்மை காரணமாக, தமிழக மக்கள் அதிக அளவில் ஆவின் கடைகளை நாடிச் சென்று, ஆவின் பால் உள்ளிட்ட ஆவின் பொருட்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். 

இவற்றுடன், ஆவின் தயாரிப்பில் பால் தவிர, ஆவின் மையங்களில் விற்பனை செய்யப்படும் நெய், தயிர், வெண்ணெய், மோர், பனீர், பால் பவுடர், பாலால் செய்யப்படும் பானங்கள், பாலால் செய்யப்படும் இனிப்புகள், மைசூர்பாக், குலாப் ஜாமூன் உள்ளிட்ட பிற இனிப்பு வகைகள் ஆகியவையும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இவற்றையும் பொது மக்கள் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், ஆவின் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில், “இன்று முதல் நெய், தயிர், பாதாம் பவுடர், போன்ற பொருட்களின் விலைகள் அதிகரிக்கபட்டு உள்ளதாக” தெரிவிக்கப்பட்டு உள்ளது.

குறிப்பாக, “ 1 லிட்டர் ஆவின் நெய் 515 ரூபாயில் இருந்து, 535 ரூபாயாக உயர்த்தப்படுவதாகவும், அரை லிட்டர் தயிர் 27 ரூபாயில் இருந்து 30 ரூபாயாக உயர்த்தப்படுவதாகவும்” ஆவின் அறிவித்து உள்ளது.

இதனிடையே, “ஆவின் பொருட்களின் விலை உயர்வை திரும்பப் பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று, சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஒ.பன்னீர்செல்வம், தமிழக அரசை தற்போது வலியுறுத்தி உள்ளார்

இது தொடர்பாக ஒ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆவின் பால் விலையை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைத்துவிட்டு, இன்று ஆவின் பொருட்களின் விலையை திமுக அரசு உயர்த்தியுள்ளதைப் பார்க்கும்போது, ஒரு பக்கம் மக்களுக்குக் கொடுப்பது போல் கொடுத்துவிட்டு மறுபக்கம் அவற்றை பிடுங்கும் முயற்சியில் ஈடுபடுவது தெளிவாகத் தெரிகிறது” என்று, குற்றம்சாட்டி உள்ளார்.

மேலும், “இது ஏழை, எளிய மக்களை ஏமாற்றும் செயல் என்றும், திமுக அரசின் இந்த மக்கள் விரோதச் செயலுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றும், ஒ.பன்னீர்செல்வம் தெரிவித்து உள்ளார்.