உக்ரைனில் சிக்கி தவிக்கும் தமிழக மாணவர்களை மீட்க சிறப்புக்குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ள்ளது.

mkstalin

ரஷியாவின் போர் நடவடிக்கையால் உக்ரைன் சின்னாபின்னமாகி வருகிறது. போர் பதற்றத்தால் உக்ரைனில் வாழும் மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளை நோக்கி தஞ்சம் அடைந்து வருகிறார்கள். கல்வி, வேலைவாய்ப்புக்காக உக்ரைனுக்கு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் சென்றிருந்தனர். குறிப்பாக தமிழகத்தில் இருந்து 5 ஆயிரம் மாணவ, மாணவிகள் உக்ரைன் பல்கலைக்கழகங்களில் மருத்துவம், என்ஜினீயரிங் படித்து வருகிறார்கள்.

மெட்ரோ சுரங்கங்களிலும், பதுங்கு குழிகளிலும் பதுங்கி உயிரை கையில் பிடித்துக்கொண்டிருந்த அவர்களை மீட்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. உக்ரைன் வான்பகுதி மூடப்பட்ட நிலையில், அண்டை நாடுகளின் எல்லைக்கு வரவழைத்து இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. ‘ஆபரேசன் கங்கா’ என்ற பெயரில் இந்த மீட்புப்பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

உக்ரைன் மீது ரஷிய படைகள் 8-வது நாளாக உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் அங்கு தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அங்கு  தமிழக மாணவர்களுக்கும் சிக்கியுள்ளனர். தொடர்ந்து அவர்களை மீட்க முயற்சிகள் மத்திய அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், உக்ரைனில் சிக்கி தவிக்கும் தமிழக மாணவர்களை மீட்க சிறப்பு குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் உக்ரைனில் உள்ள தமிழக மாணவர்கள் மீட்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அலுவலர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கிய முதல்-அமைச்சர் இந்திய தூதர்களுடன் ஒருங்கிணைந்து மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள தமிழக எம்.பி.க்கள் திருச்சி சிவா, கலாநிதி வீராசாமி, எம்.எம்.அப்துல்லா மற்றும் சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்டோர் அடங்கிய குழுவை அமைத்து உத்தரவிட்டார்.

மேலும், இந்த சிறப்பு குழுவில் 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் மீட்பு பணியில் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்வர் என்றும் தெரிவித்துள்ளார். உக்ரைனின் மேற்கு பகுதியில் அதிகமான மாணவர்கள் தங்கியிருப்பதால், அவர்களை ரஷிய எல்லை வழியாக அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதுவரை உக்ரைனில் இருந்து தமிழ்நாட்டை சேர்ந்த 193 மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.