“அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஒரே குடும்பம் தான்!” சசிகலா உருக்கம்..
“அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஒரே குடும்பம் போன்றவர்கள்” என்று, சசிகலா பேசி உள்ளது அதிமுகவில் பேசும் பொருளமாக மாறி உள்ளது.
“அதிமுகவில் சசிகலாவையும் சேர்த்துக்கொண்டு கட்சியை பலப்படுத்த வேண்டும்” என்கிற தீர்மானம், நேற்று முன் தினம் பெரியகுளத்தில் நடந்த கூட்டத்தில் தேனி மாவட்ட அதிமுகவினர் தீர்மானம் நிறைவேற்றி உள்ள நிலையில், அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ஆறுகுட்டியும் இதனையே வலியுறுத்தி இருந்தார்.
அதாவது, தமிழக சட்டமன்றம் மற்றும் சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சி மன்றத் தேர்தலில் திமுக பெரும் வெற்றி அடைந்த நிலையில், அதிமுக படுதோல்வி அடைந்துள்ளது.
முக்கியமாக, சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலிலும், நடந்து முடிந்து உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக படுதோல்வியை சந்தித்து உள்ளது.
மிக முக்கியமாக, ஓபிஎஸ் - ஈபிஎஸ் ஆகியோர் தங்களது சொந்த மாவட்டங்களிலேயே தங்களது செல்வாக்கை முற்றிலுமாக இழந்து படுதோல்வியை அடைந்தனர்.
மிக முக்கியமாக, 21 மாநகராட்சிகளை திமுக கைப்பற்றிய நிலையில், பெரும்பாலான இடங்களில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதில், மாநகராட்சியில் மட்டும் திமுகவுக்கு 43.59 சதவீத வாக்குகளும், அதிமுகவுக்கு 24 சதவீத வாக்குகளும் கிடைத்தன.
இந்த விவகாரம், அதிமுகவினர் மத்தியில் பெரும் விவாத பொருளாக மாறி, பலவிதமாக பேசப்பட்டு வந்த நிலையில் தான், கடந்த சில மாதங்களாக அதிமுக தொடர்ந்து தேர்தல் களத்தில் தொடர்ச்சியாக பின்னடைவை சந்தித்து வருவது, கட்சியின் அடிமட்டத் தொண்டர்களிடையே கடும் அதிர்ச்சியையும், பயத்தையும் ஏற்படுத்தியது என்றே கூறலாம்.
இதனால், “சசிகலா - தினகரன் ஒருபுறம், ஓபிஎஸ் - ஈபிஎஸ் மற்றொருபுறம் என்று, கட்சிக்குள் பிளவு ஏற்பட்டு இருப்பதே இதற்கு முக்கிய காரணம்” என்றும், குற்றம்சாட்டிய அதிமுக நிர்வாகிகள் பலரும், வாய்விட்டே இது பற்றி அக்கட்சிகள் பேசத் தொடங்கினார்கள்.
இதனையடுத்து, அதிமுகவில் சசிகலா, டிடிவி தினகரனை இணைப்பது குறித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஆலோசனை கூட்டம் முன்னதாக நடைபெற்றது.
அந்த வகையில், தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கைலாசப்பட்டியில் இருக்கும் ஓ.பன்னீர்செல்வத்தின் பண்ணை வீட்டில், அதிமுகவின் தேனி மாவட்ட அளவிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற நிலையில், இந்த ஆலோசனை கூட்டத்தில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் சையது கான் உள்ளிட்ட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அப்போது, “அதிமுகவில் இருந்து ஏற்கனவே நீக்கப்பட்ட சசிகலா, டி.டி.வி. தினகரன் ஆகியோரை எந்தவித நிபந்தனையும் இன்றி, மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும்” என்று, அப்போது வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை, வரும் 5 ஆம் தேதி நடைபெறும் மாவட்ட அளவிலான கூட்டத்தில், தீர்மானமாக நிறைவேற்றவும் முடிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.
அதன் தொடர்ச்சியாகவே, அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ஆறுகுட்டி, “அதிமுகவில் சசிகலாவையும் சேர்த்துக்கொண்டு கட்சியை பலப்படுத்த வேண்டும்” என்று, வெளிப்படையாகவே வலியுறுத்தினார்.
இந்த நிலையில் தான், வரும் 5 ஆம் தேதி நடைபெறும் மாவட்ட அளவிலான கூட்டமானது, ரத்து செய்யப்படுவதாக இன்றையதினம் திடீரென்று அறிவிக்கப்பட்டது.
இந்த சூழலில் தான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, “தொடர் தோல்விகளை சந்தித்ததால் அதிமுகவினர் துயரத்தில் உள்ளனர்” என்று, குறிப்பிட்டார்.
மேலும், “அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஒரே குடும்பம் போன்றவர்கள் தான் என்றும், குடும்பத்தில் உள்ள பிள்ளைகளை பார்க்கச் செல்கிறேன், தொண்டர்கள் என்னை நிச்சயம் சந்திப்பார்கள்” என்றும், அவர் புதிய நம்பிக்கை தெரிவித்தார்.
சசிகலாவின் இந்த பேட்டி, அதிமுகவில் தற்போது பேசும் பொருளமாக மாறி உள்ளது.